தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையில் நெருக்கமான உறவு : முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினர் தமது அடையாளத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக சில விடயங்களில் குரல் எழுப்பினாலும், அவர்களுக்கும் புதிய ஆட்சியாளர்களுக்கு மிடையில் நல்லுறவு காணப்படு வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு கூறியுள்ளார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு க்கும், மத்திய அரசாங்கத்துக்கும் இடையிலான ஈடுபாடு சிறப்பான முறையில் காணப்படுவதாகவும் இந்தியாவிலிருந்து வெளியாகும் இந்து பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டில் நல்லிணக்கத்தை குறிப்பாக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே தேசிய ரீதியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் எதிர்காலத்துக்கு இது மிகவும் முக்கியமானது என நீண்டகாலத்தின் பின்னர் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்துக்கான விசேட ஜனாதிபதி செயலணியான தேசிய ஒருமைப்பாட்டு நிலையத்திற்கு தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும் என அவர் கூறியுள்ளார்.

நல்லிணக்கம் தொடர்பாக இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகளிடமிருந்து ஊக்குவிப்புக்கள் வந்து குவிந்துள்ளன. இந்தியா அனைத்து வழிகளிலும் தமக்கு உதவுவதாக உறுதிமொழி வழங்கியிருப்பதாக வும் சந்திரிகா குமாரதுங்க இந்துவுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையாக அணிசேரா கொள்கை உறுதியுடன் கடைப்பிடிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஆட்சியாளர் களால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல்களை நிவர்த்தி செய்து மீண்டும் இரு நாட்டுக்கும் இடையில் நல்லுறவு களைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சந்திரிகா குமாரதுங்க, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களுக்குள் இந்தியப் பிரதமர் இலங்கை வந்திருப்பதானது இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவு தொடர்பில் பலமானதொரு செய்தியை வங்கியிருப்பதாகவும் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ அவருடைய மோசமான ஆட்சி மற்றும் குடும்ப ஊழல்கள் காரணமாக நாட்டு மக்களால் ஜனநாயக ரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். அவருடைய ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள், ஊழல்கள், கொலைகள் என்பன அதிகரிக்கப்பட்டிருந்ததுடன், சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அதேநேரம், மீண்டும் தேர்தல் மூலம் அரசியலுக்கு வரவிருப்பதாக முன்வைக்கப்படும் கருத்துக்களை மறுத்திருக்கும் அவர், “எனது மகன் அரசியலுக்கு வருவது தொடர்பில் நான் கதைக்க விரும்பவில்லை. அதேநேரம், தேர்தல் ஊடான அரசியலுக்கு நான் வரமாட்டேன். அவ்வாறு வருவதை அசிங்கமாகக் கருதுகிறேன்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply