மைத்திரி, மஹிந்த , ரணில் தலைமையில் தனித்தனி கூட்டணிகள் : சின்னங்கள் குறித்தும் ஆராய்வு

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோர் தலைமையில் மூன்று கூட்டணிகள் தனித்தனியாக களமிறங்கவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை கிராம மட்டங்களிலிருந்து கட்சிகள் ஆரம்பித்துள்ளன.அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் சில அமைப்புக்களுடன் கூட்டணியாகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமைத்துவம் வழங்கும் ரணில் விக்கிரமசிங்க தமிழ், முஸ்லிம் மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணியாகவும் மஹிந்த ராஜபக் ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிருப்திக் குழுவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தமிழ், முஸ்லிம் மற்றும் வேறுசில கட்சிகளுடன் கூட்டணியமைக்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தனது சின்னமான யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதுடன் கூட்டணிக் கட்சிகளுடன் ஆசனப் பகிர்வு குறித்தும் ஆராய்ந்து வருகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவ்வாறான கூட்டணி அமைப்பது என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன், எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும் இது வரையில் தீர்மானிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிருப்திக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள போதிலும் அவர்களும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நிலைமை இவ்வாறிருக்க, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதி ருப்திக் குழுக்கள் மக்கள் சந்திப்புக் களையும் கூட்டங்களையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply