செம்மரக் கடத்தல் விவகாரம்: ஆந்திராவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேர் பலி
ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரங்களை வெட்டியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. திருப்பதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் ஸ்ரீவாரிமெட்டு எனும் இடத்திலிருந்து விலைமதிப்பு மிக்க செம்மரங்கள் நாள்தோறும் கடத்தப்படுகின்றன.இதனைத் தடுக்க ஆந்திர காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் தினமும் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலையேறும் பயிற்சி பெற்ற ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படையினர் வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை நடந்த என்கவுன்டரில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் ஒருவர் சர்வதேச செம்மரக் கட்டை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்த கூலி தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஒரு நாள் வெட்டுக்கூலியாக ரூ.2000 முதல் ரூ.5000 முதல் கிடைப்பதாலேயே தமிழக கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் செம்மரம் வெட்ட செல்கின்றனர் என கூறப்படுகிறது.
‘தற்காப்புக்காக சுட்டோம்’
சம்பவம் குறித்து போலீஸ் டி.ஜி.பி. கன்டா ராவ் கூறும்போது, “காலை 5 மணியளவில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியவர்களை போலீஸார் சுற்றி வளைத்தனர். வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கொள்ளையர்களும், கூலித் தொழிலாளர்களும் இருந்துள்ளனர். அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் போலீஸார் தாக்க கடத்தல் கும்பல்காரர்கள் முயற்சித்தனர். தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் இதில் 20 பேர் பலியாகினர்.
சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. பேட்டி:
சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. சட்டம் ஒழுங்கு ஆர்.பி.தாக்கூர் கூறும்போது, “செம்மரக் கடத்தல்காரர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் போலீஸார தாக்கினர். கற்களை வீசி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான நிலையில் போலீஸார் திருப்பித் தாக்கினர். கடத்தல்காரர்களில் பெரும்பாலோனோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆந்திர வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி அவற்றை தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். போலீஸ், வனத்துறை அதிகாரிகள் எத்தனை பேர் காயமுற்றனர் என்ற தகவல் இன்னமும் கிடைக்கவில்லை” என்றார்.
தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்:
தமிழக தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரணை நடத்தாமல், துப்பாக்கிச் சூடு நடத்தியது கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
வைகோ அதிர்ச்சி:
செம்மரங்களை வெட்டியதாக 12 தமிழர்கள் உட்பட 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply