சந்திரிகாவும் களமிறக்கம் பிரதமர் பதவிக்கும் போட்டி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக கட்சி வட்டார ங்களிலிருந்து தெரிய வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சுதந்திர கட்சியிலிருந்து ஓரம் கட்டும் விதமாகவே கட்சிக்குள் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது. இது தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வருவதாவது,முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கு வாசு, தினேஷ், விமல் மற்றும் கம்மன்பில, பிரசன்ன ரணதுங்க உட்பட குழுவினர் கடந்த காலங்களில் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
அத்துடன், மஹிந்தவிற்கு ஆதரவாக பொது கூட்டங்களையும் அவர்கள் நடத்தியுள்ளனர்.
மஹிந்தவும் ஜனாதிபதி தேர்தலின் தோல்விக்கு பின்னர் ஒதுங்கியிருக்காது, விகாரைகளில் நடைபெறும் விழாக்களிலும் மற்றும் மத அனுஷ்டானங்களிலும் கலந்துகொண்டதோடு அவ்வப்போது ஊடகங்களுக்கு கருத்துக்களையும் வெளியிட்டார்.
கொழும்பு, நாரன்ஹேன்பிட்டி அபயராம விகாரையில் மஹிந்தவுக்கு என தனியான அலுவலகமும் வழங்கப்பட்டுள்ளது.
மறுபுறம் ஏ.எஸ்.பி. லியனகேவுக்கு சொந்தமான பீகொக் மாளிகையும் மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, அங்கு யாகங்களும் நடைபெற்றுள்ளன.
இவ்வாறு மஹிந்த மீள அரசியல் பிரவேசவத்திற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் சூழ்நிலையிலேயே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19 வது திருத்தத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசு முன்வைத்தது.
இதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக அரசின் பங்காளிக் கட்சியான ஹெல உறுமய மற்றும் சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிகளுக்குள் முரண்பாடுகள் தலைதூக்கின. தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜே.வி.பி.யும் இதற்கு ஆதரவை வெளியிட்டன.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19 க்கு ஆதரவு வழங்காவிட்டால் பாராளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.
இதன் பின்னர் கலவரமடைந்த சுதந்திர கட்சியினர் ஜனாதிபதியை சந்தித்து 19 க்கு ஆதரவு தெரிவிக்கவும் அத்தோடு 20வது திருத்தமாக தேர்தல் முறைமையில் மாற்றத்தையும் கொண்டு வந்து நிறைவேற்றவும் இணக்கம் தெரிவித்தனர்.
ஜாதிக ஹெல உறுமயவின் பொது செயலாளரும், அமைச்சருமான சம்பிக்கவும் திருத்தங்களுடனான ஆதரவுக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதோர் நிலையிலேயே மஹிந்தவை சுதந்திர கட்சியிலிருந்து ஓரம் கட்டும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதோடு, பொது தேர்தலில் சுதந்திரகட்சியின் பிரதமர் வேட்பாளராக சந்திரிகா போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply