ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வது மகிழ்ச்சியான செய்தி: கருணாநிதி பேட்டி
நீதியை நிலைநாட்ட யார் முன்வந்தாலும் வரவேற்க தயார் என்றும், ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வது மகிழ்ச்சியான செய்தி என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- கர்நாடக அரசு ‘‘அப்பீல்’’ செய்ய முடிவு செய்திருக்கிறதே; அதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
பதில்:- ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு ‘அப்பீல்’ செய்யப் போவதாக; வந்துள்ள செய்தி மகிழத்தக்க செய்தியாகும். நீதியை நிலைநாட்ட யார் முன்வந்தாலும் அவர்களை வரவேற்கத் தயாராக இருப்பவன் நான் என்பதால், கர்நாடக அரசின் முடிவை வரவேற்கிறேன்.
கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை பெரும்பாலான எதிர்க்கட்சிகள், உங்களைப் போலவே புறக்கணித்திருக்கிறார்களே?.
பதில்:- தமிழ்நாட்டில் தற்போது தேர்தல்கள் எப்படி நடைபெறுகிறது என்பதை ஏற்கனவே நேரில் உணர்ந்த கட்சிகள், இனியும் தாங்கள் இந்த ஜனநாயக முரண்பாடுகளுக்குப் பலியாகத் தயாராக இல்லை என்பதால்தான், இந்த இடைத்தேர்தலை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. இது வரவேற்கத்தக்க செய்தியாகும்.
கேள்வி:- ஐ.ஐ.டி. மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு நல்கியபோதும், அரசுத் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஒரு அறிக்கைக்கூட வெளியிடவில்லையே?.
பதில்:- மாநில அரசு இது பற்றி வாய் திறந்தால்தான் ஆச்சரியம்.
கேள்வி:- தாழ்த்தப்பட்ட மாணவ சமுதாயத்தின்மீது நடக்கிற தாக்குதல்கள் என்று இதனை எடுத்துக்கொள்ளலாமா?.
பதில்:- ஐ.ஐ.டி. மாணவப் பிரச்சினை குறித்து கழகத்தின் சார்பில் நானும், பொருளாளர் ஸ்டாலினும் விளக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளோம். அதில் எல்லா விவரங்களும் இடம் பெற்றுள்ளன. கழகத்தின் சார்பில் இதற்காக அங்கே ஆர்ப்பாட்டமும் நேற்று நடைபெற்றுள்ளது.
கேள்வி:- ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ‘டிராபிக்’ ராமசாமி உங்களிடம் ஆதரவு கேட்டிருந்தாரே; உங்கள் நிலைப்பாடு என்ன?.
பதில்:- ‘டிராபிக்’ ராமசாமி பல கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். அதுபோலத்தான் எங்களையும் கேட்டிருக்கிறார். நாங்கள் அதைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறோம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply