முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: ஜெயலலிதா கடிதம்
முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய கேரள அரசுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என இந்தியப் பிரதமர் மோதிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருக்கிறார்.இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணை எல்லாவிதத்திலும் பாதுகாப்பாக இருக்கிறது; ஆகவே புதிய அணை கட்டுவதற்கு அவசியமில்லையென இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி அளித்த தீர்ப்பை ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்த நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் புதிய அணை கட்டுவதற்காக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்வதற்கென கேரள அரசு அளித்த ஆலோசனைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பரிசீலித்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
கேரள அரசுக்கு இது தொடர்பாக அனுமதி ஏதும் அளிக்கவில்லெயென சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுத்துவிட்டாலும், கேரள அரசின் வேண்டுகோளைப் பரிசீலிப்பதே உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறுவதற்குச் சமமானது என ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
மத்திய அரசு இந்த ஆலோசனையைப் பரிசீலிக்காமல், கேரள அரசுக்கேத் திருப்பி அனுப்பியிருக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வரும் காலத்தில், கேரள அரசு இப்படிப்பட்ட ஆலோசனைகளை அளித்தால், அதனைப் பரிசீலிக்காமல் உடனடியாகத் திருப்பி அனுப்ப மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டுமென நரேந்திர மோதியை ஜெயலலிதா கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தமிழக – கேரள எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை பலமிழந்துவிட்டதாக கேரள அரசு கூறிவருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு அணை உறுதியாக இருப்பதாகத் தீர்ப்பளித்தது. அணையின் நீர்மட்டத்தையும் 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளவும் அனுமதியளித்தது.
இதை எதிர்த்து, கேரள அரசு தொடர்ந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை பலமின்றி இருப்பதால் புதிய அணையைக் கட்ட வேண்டுமென கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply