35,985 பேர், 844 வெளிநாட்டினர் கலந்து கொண்ட டெல்லி யோகாசன முகாம் 2 கின்னஸ் சாதனைகளை படைத்தது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லி ராஜபாதையில் இன்று நடைபெற்ற மாபெரும் யோகாசன முகாம் இரண்டு புதிய கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன் பற்றி குறிப்பிட்டு, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21–ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.
இதையடுத்து, டெல்லி ராஜபாதையில் இன்று 5 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி குழந்தைகள் உள்பட சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டெல்லியில் உள்ள 152 வெளிநாட்டு உயர் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பல வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தலைமையுரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அமைதியான புதுயுகத்தை உருவாக்க யோகா பயிற்சி உதவி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார். ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்த ஐ.நா. சபைக்கும் அதையேற்று இன்று முதலாவது சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்கும் உலக நாடுகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மோடி கூறினார்.
இந்நிலையில், இன்றைய யோகாசன நிகழ்ச்சியில் 35 ஆயிரத்து 985 பேர் பங்கேற்றதாக கணக்கிட்டுள்ள கின்னஸ் நிறுவனம், உலகிலேயே முதன்முதலாக அதிக நபர்கள் ஒரே இடத்தில் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி என்ற உலக சாதனையில் இன்றைய நிகழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் நகரில் கடந்த 19௧1௨005 அன்று ஜிவாஜி பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட 29 ஆயிரத்து 973 பேர் பங்கேற்ற யோகாசன முகாம் இதற்கு முந்தைய உலக சாதனையாக ’கின்னஸ்’ புத்தகத்தில் பதிவாகி இருந்தது. அந்த சாதனையை இன்றைய டெல்லி யோகாசன முகாம் முறியடித்து விட்டது.
அது மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த 844 பிரதிநிதிகள் பங்கேற்ற ஒரே முகாம் என்ற புதிய சாதனையையும் இந்த முகாம் ஏற்படுத்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply