இளைஞர் சமுதாயத்துக்கு சிறந்த எதிர்காலம் ; ஐ.தே.கவின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்

இளைஞர் சமுதாயத்துக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். தேசிய இளைஞர் முன்னணி அலரிமாளிகையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து இளைஞர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுப்பது நாடு எதிர்கொள்ளும் பாரிய சவாலாகவுள்ளது.

சிறந்த தொழில்வாய்ப்பு, கல்வி அபிவிருத்தி, நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதன் ஊடாக ஊழல் மோசடியற்ற சிறந்ததொரு எதிர்காலத்தை இளைஞர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க முடியும். புதிய பாராளுமன்றம் இந்த மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதாகவும் பிரதமர் தனது உரையின் போது குறிப்பிட்டார்.

தற்பொழுது இருக்கும் பாராளுமன்றம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்காக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றம். அவருடைய தோல்வியுடன் அவருக்கு வழங்கிய ஆணையும் முடிந்துவிட்டது.

எமது திட்டங்களை இந்தப் பாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது. எனவேதான் கூடிய விரைவில் தேர்தலொன்றுக்குச் செல்லவேண்டும் என கூறி வருகின்றோம். கடந்த தேர்தலின் போது ஐ.தே.க பாரிய அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சியொன்றின் செயலாளர் நாயகம் போட்டிக்கட்சியொன்றின் வேட்பாளராக களமிறங்கியமை உலகில் இதுவே முதல்தடவையாகும் என்றும் பிரதமர் கூறினார்.

ஐந்து வருடங்களில் நாட்டில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் என வலியுறுத்திய பிரதமர், தொழில்நுட்பம், ஹோட்டல்துறை உள்ளிட்ட சேவைத்துறைகளில் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.

“10 வருடங்களுக்கு மேலாக ராஜபக்ஷ நிர்வாகம் அந்நியச் செலாவணியை வீண்விரயம் செய்திருப்பதுடன், களவெடுத்து தன்னகப்படுத்தியுள்ளது” என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

உலக சந்தையில் சிறந்த இடத்தை இலங்கை மீண்டும் பிடிப்பதற்கும், வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கும் பாராளுமன்றத்தில் ஐ.தே.க பெரும்பான்மையைப் பெறவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply