தமிழகத்தில் ஆட்சி நடக்கவில்லை- காட்சிதான் நடக்கிறது: கருணாநிதி பேச்சு
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதி தான் என்று கூறி, அவரை பாராட்டும் வகையில் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆலந்தூரில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மெட்ரோ ரெயில் உருவம் பொறித்த நினைவு பரிசும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
கூட்டத்தின் நிறைவாக தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்புரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இதுவரையில், ஒரு அருமையான, எண்ணிப்பார்க்கத்தக்க கருத்தை உரையாக தொகுத்து கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசினார்கள். நான் இந்த விஷயத்தில் அதிகம் தெரிந்து கொண்டதாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அண்ணா இருந்தபோது, தி.மு.க. பொதுக்கூட்டங்களில் தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டங்களை விளக்கி கூறுவார். பொதுக்கூட்டங்களை மாலை நேர கல்லூரிகள் என்று அவர் கூறுவார். அதுபோன்ற கூட்டமாக இதை நான் கருதுகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் அறிந்து இன்று அனுபவப்பூர்வமாக மெட்ரோ ரெயிலில் நீங்கள் பயணம் செய்கிறீர்கள். இதற்கு யார் காரணம்? என்பதை எடுத்துரைக்கவே தி.மு.க. சார்பில் இந்த நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
தி.மு.க. ஆட்சியில், மக்களுக்கான திட்டங்கள் தொடங்கப்படுவது வழக்கமான ஒன்று. தேர்தல் அறிக்கையில் கூறியதை முழுவதும் நிகழ்த்தி காட்டிய ஒரே கட்சி தி.மு.க. தான். தி.மு.க.வை வரும் தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம் என்று மார்தட்டி கொண்டால் முதலில் தட்டிப்பார்க்க வேண்டியது மக்களின் நெஞ்சங்களைத்தான்.
அ.தி.மு.க. ஆட்சியில், மக்கள் படும் வேதனைகளை ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். ஒரு அரசு மக்களை பாதுகாக்கும் அரசாக இருக்கவேண்டும். ஆனால், நடைபெற்று கொண்டிருக்கும் அரசு மக்களை பாதுகாக்கவில்லை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி சில-பல ஆண்டுகள் நடந்துள்ளது. அப்போது இந்தியாவில் இல்லாத அளவு, உலக நாடுகளில் இல்லாத அளவு அண்ணா பெயரில் ஒரு பெரிய நூலகம் சென்னையில் கட்டப்பட்டது. அதன் இன்றைய கதி என்ன? இன்று தமிழகத்தின் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு நூலகமும் பயன்படவில்லை. இருக்கும் நூலகங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் அண்ணா, பெரியார், அம்பேத்கர் பெயரில் இருந்தாலும் பயனற்ற நிலையில் ஆக்குகிறார்கள்.
மெட்ரோ ரெயில் திட்டம் என்பதை கண்டுபிடித்ததே நாங்கள் தான் என்று ஜெயலலிதா கூறியதாக பத்திரிகையில் படித்தேன். இந்த பெருமை யாருக்கு சொந்தம்? என்பதை சிந்தித்து பார்க்க உங்களிடமே விட்டுவிடுகிறேன். மக்களுக்கான திட்டங்களை அரசு நிறைவேற்றினால் நானே நன்றி பாராட்டுவேன்.
தயவுசெய்து ஓய்வெடுத்து உங்கள் (ஜெயலலிதா) உடல்நலத்தை பார்த்து கொள்ளுங்கள். முதல்-அமைச்சர் என்பவர், ஒரு நாட்டுக்கு ரகசியமானவராக இருக்கக்கூடாது. பகிரங்கமாக, வெளிப்படையாக இருக்கவேண்டும். இந்தியாவிலேயே முதல்- அமைச்சர் இல்லாத மாநிலம் தமிழ்நாடு தான். அவருக்கு வேலை இல்லை. வேலை செய்ய உடல்நலம் இல்லை. அதனால் எந்த திட்டமும் தொடங்கப்படவில்லை. அவரிடம் ஓ.பன்னீர்செல்வம் படாதபாடுபடுகிறார். இந்த ஆட்சியில் ‘பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று’, என்று அவர் இருக்கிறார். அவர் மீது பரிதாபம் பட்டுதான் நான் இங்கு பேசுகிறேன். என்னை அவர் தனியாக பார்த்தால், ஓ…வென்று அழுதுவிடுவார் என நினைக் கின்றேன். அவர்களை கேலி செய்ய இவ்வாறு கூறவில்லை. அவர்கள் திருந்தி, மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற பாடுபடவேண்டும்.
தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கவில்லை. காட்சி தான் நடக்கிறது. எவ்வளவு நாள் தான் பார்த்துக்கொண்டு இருக்கமுடியும்? தி.மு.க. ஆட்சியில் தான் மெட்ரோ ரெயில் திட்டம் வந்தது. விலைவாசி குறைந்தது. ஏழை-எளிய மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த எல்லாவற்றையும் மறந்து, நீங்கள் (அ.தி.மு.க.) நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது.
இது நன்றி அறிவிப்பு கூட்டம். நீங்கள் (பொதுமக்கள்) நன்றி உடையவர்கள் என்றால், எங்களை எத்தனை முறைதான் ஏமாற்றுவீர்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்களும் காத்திருக்கிறோம். உங்களை ஒருபோதும் நாங்கள் கைவிடப்போவதில்லை. நீங்கள் எங்களை தண்டித்தது போதும். நீங்கள், உங்களை அ.தி.மு.க.விடம் இருந்து விடுவித்துக்கொள்ளுங்கள். மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைய எங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் 1971-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில், முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோதுதான் சென்னையில் முதல் மேம்பாலமாக அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர்கோட்டம், கிண்டி கத்திப்பாரா, பாடியில் உள்ள மேம்பாலங்கள், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என அனைத்தும் தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டன.
1991-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்த போது, சென்னை மாநகராட்சி மேயராக நான் இருந்தேன். அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் 10 மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோயம்பேடு பஸ் நிலையம், ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள், எண்ணூர் புதிய அனல் மின்நிலையம் போன்றவை தொடங்கப்பட்டது, தி.மு.க. ஆட்சி காலத்தில் தான். இந்த திட்டங்களுக்கு எல்லாம் சிகரமாக இருப்பது, மெட்ரோ ரெயில் திட்டம் தான்.
தமிழகத்தின் முதல்-அமைச்சராக 3 முறை ஜெயலலிதா இருந்துள்ளார். தற்போதும் இருக்கிறார். நான் கேட்கிறேன், அ.தி.மு.க. ஆட்சியில் சென்னையில் ஏதாவது திட்டங்கள் தொடங்கப்பட்டது உண்டா? 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வித்திடப்பட்டதாக ஜெயலலிதா கூறுகிறார்.
ஆனால், 2006-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா சட்டசபையில் பேசும்போது, ‘மோனோ ரெயில் திட்டத்தை நாங்கள் செயல்படுத்த விரும்புகிறோம். ஆனால் எந்தவகையிலும் ஒத்துவராத மெட்ரோ ரெயில் திட்டத்தை நீங்கள் செயல்படுத்த விரும்புவது ஏன்?. மெட்ரோ ரெயில் திட்டத்தை 1 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்த ரூ.250 கோடி செலவு ஆகும். ஆனால் மோனோ ரெயில் திட்டத்தை 1 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்த ரூ.50 கோடி தான் செலவாகும். எனவே மெட்ரோ ரெயில் திட்டம் உருப்படாத திட்டம்’ என்றார்.
ஆனால் இன்று மெட்ரோ ரெயில் திட்டம் என் சிந்தையில் உதித்த திட்டம் என்கிறார். இந்த திட்டத்துக்கு தி.மு.க. உரிமை கொண்டாட முடியாது என்கிறார். அதேநேரத்தில், மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக இருப்பதற்கு நான் பொறுப்பு கிடையாது என்கிறார். மக்கள் மன்றத்தை அவர் ஏமாற்ற முடியாது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
பொதுக்கூட்டத்தில், தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, முன்னாள் மத்திய மந்திரி அ.ராசா, சென்னை மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply