துருக்கியில் ராணுவ தளத்தை தகர்க்க முயற்சி பாதுகாப்பு படையினரின் அதிரடியில் 35 பயங்கரவாதிகள் பலி

turkey துருக்கியில் குர்து இன பயங்கரவாதிகள் ராணுவ தளம் ஒன்றை தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருடனான மோதலில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 4 முறை ராணுவ புரட்சிகளை சந்தித்து வந்துள்ள துருக்கி நாட்டில் கடந்த 15-ந்தேதி மீண்டும் ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சி செய்து, ஆட்சி கவிழ்ப்புக்கான முயற்சியில் களம் இறங்கினர்ஆனால் அந்த நாட்டின் அதிபர் எர்டோகன் அழைப்பின்பேரில் பொதுமக்களும் களத்தில் இறங்கி கிளர்ச்சியாளர்களுடன் தீரமுடன் சண்டையிட்டனர்.

 

இதன் முடிவில் ராணுவ புரட்சி முயற்சி தோல்வி கண்டது. ஆட்சி பிழைத்தது.

 

 

இருப்பினும் இதில் பொதுமக்கள், ராணுவத்தினர் என இருதரப்பிலும் சேர்த்து சுமார் 350 பேர் கொல்லப்பட்டனர். அந்த நாட்டின் பாராளுமன்றம் பெரும் தாக்குதலுக்கு உள்ளானது. புரட்சிக்கு முயற்சித்த குற்றச்சாட்டின்பேரில் ஏறத்தாழ 16 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ராணுவ புரட்சி முயற்சியை தொடர்ந்து அங்கு 3 மாத நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான படைவீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

 

அங்கு தற்போது பி.கே.கே. என்றழைக்கப்படுகிற குர்து இன பயங்கரவாதிகள் கிளர்ச்சிகளிலும், நாசவேலைகளிலும் ஈடுபட்டு அங்கு பதற்றமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர்.

 

இந்த நிலையில் துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹக்காரி மாகாணத்தில் உள்ள பெய்புட்டா மலை ராணுவ தளத்தை தகர்க்க நேற்று காலை முயற்சி நடந்தது.

 

அங்கு குர்து இன பயங்கரவாதிகள் 3 குழுக்களாக பிரிந்து சென்று அந்த ராணுவ தளத்தை அதிரடியாக தகர்க்க முயற்சி எடுத்தனர். அவர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் களம் இறங்கினர். இரு தரப்புக்கும் இடையே கடும்சண்டை நடந்தது.

 

 

 

இதற்கிடையில் குர்து இன பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான வான் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

 

இதன் முடிவில் குர்து இன பயங்கரவாதிகள் 35 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 23 பேர் வான்தாக்குதல்களில் உயிரிழந்தனர். மற்றவர்கள் தரைவழி தாக்குதலில் உயிரிழந்தனர். ராணுவ தள தகர்ப்பு முயற்சி தோல்வி அடைந்தது.

 

இந்த குர்து இன பயங்கரவாதிகளை துருக்கி, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை பயங்கரவாதிகளாக அறிவித்து தடை செய்துள்ளன. 30 ஆண்டு காலமாக அவர்கள் துருக்கியில் தாக்குதலை நடத்தி பின்னர் நிறுத்தி இருந்தனர். இப்போது அவர்கள் மீண்டும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்குதல்களைத் தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply