தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் பா.ம.க. ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னையில் நடந்த பா.ம.க. ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார்.சென்னையில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் என்ஜினீயர் சுவாதி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி நவீனா ஆகியோர் கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டும். ஐ.நா. சபை உடன்படிக்கைகளின்படி தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர்கள் கே.என்.சேகர், திருக்கச்சூர் ஆறுமுகம், பசுமை தாயகம் பொதுச்செயலாளர் அருள் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.டாக்டர் ராமதாஸ் பேச்சு
ஆர்ப்பாட்டத்தில், டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–தங்களை முற்போக்காளர்கள் என்று சொல்லிக்கொள்ளும், சுப வீரபாண்டியன், கொளத்தூர் மணி போன்றவர்கள் ‘பெரியார் காதலை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்’ என்பதை ‘பெரியார் களஞ்சியத்தில்’ 122–வது பக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.காதல் நாடக திருமணங்களை தடுப்பதற்காக பெண்கள் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 21 வயதுக்குள் பெண்களால் தீர்மானிக்க முடியாது. ஹார்மோன் குறைபாடுகளால் சிறுவயதிலேயே காதல் வலையில் விழுந்து, திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றப்படுகின்றனர் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.பா.ம.க.வின் கொள்கைகள்
தமிழகத்தில் காதல் நாடக திருமணத்துக்கு எதிராக நான் 32 மாவட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். தமிழ்நாட்டில் மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சில இளைஞர்கள் அறுவருக்கத்தக்க வகையில் ஈவ்–டீசிங் செய்கிறார்கள். போலீசார் ஈவ்–டீசிங் தடுப்புப் பிரிவை ஏற்படுத்தி பள்ளி, கல்லூரி அருகில் மற்றும் பஸ் நிலையங்களில் சாதாரண உடையில் நின்று கண்காணிக்க வேண்டும்.சென்னையை போன்றே தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மாணவிகள், பெண்களுக்கு என்று மகளிர் மட்டும் பஸ்களை இயக்க வேண்டும் என்று பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி விழுப்புரத்தில் கடந்த 2013–ம் ஆண்டு ஜனவரி 22–ந்தேதி நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்க தலைவர்கள் கூட்டத்தில் நான் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறேன்.பா.ம.க.வின் கொள்கைகள் ஒட்டுமொத்த சமுதாயமும் சுதந்திரமாக இருக்க வேண்டும். நீதியுடன் கூடிய சமத்துவம் இருக்க வேண்டும். சமூக ஒற்றுமையாக இருக்க வேண்டும். மதம், இனம், சாதி வேறுபாடு இன்றி ஒரு தாய் பிள்ளை போல அனைவரும் வாழ வேண்டும்.ரூ.1 கோடி இழப்பீடு
மாணவி நவீனா குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் அவர்கள் வழங்க போவதில்லை. எனவே மாணவி நவீனா குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்று தர நீதிமன்றத்தை அணுகுவோம்.பெண் முதல்–அமைச்சராக இருக்கிற தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.நவீனா குடும்பத்தினர் பங்கேற்பு
ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி நவீனாவின் தந்தை அங்கப்பன், தாயார் நாவம்மாள் உள்பட குடும்பத்தினரும் மற்றும் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.கொலை செய்யப்பட்ட சுவாதி, நவீனா ஆகியோர் உருவப்படம் பொறித்த பதாகைகளை ஏந்தியபடி பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி அனைவரும் கோஷங்கள் எழுப்பினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply