சல்மான்கான் பாகிஸ்தானுக்கு சென்று நடிக்க வேண்டும்’ ராஜ் தாக்கரே ஆவேசம்
‘‘பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நடிகர் சல்மான்கான் பாகிஸ்தானுக்கு சென்று நடிக்க வேண்டும்’’ என்று ராஜ் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளார். காஷ்மீர் மாநிலம் உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய மொழி படங்களில் நடிக்க தடை விதித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மும்பையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த இந்தி நடிகர் சல்மான்கான், ‘‘பாகிஸ்தான் நடிகர்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல. கலையையும், பயங்கரவாதத்தையும் ஒன்றுபடுத்த கூடாது’’ என்று கருத்து தெரிவித்தார்.
சல்மான்கானின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேற்று நிருபர்களுக்கு ஆவேசமாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
நானும் ஒரு கலைஞன் தான். கலைஞர்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் நடிகர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும்போது, அவர்களுக்காக நம் நாட்டு நடிகர்கள் ஏன் பேசுகிறார்கள்?
பாகிஸ்தான் ராணுவத்துடன் நமது ராணுவ வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் விரோதம் ஏதும் கிடையாது. நமது வீரர்கள் எதிர்கொண்ட தோட்டாக்கள் ஒன்றும் சினிமா காட்சி அல்ல. அவை உண்மையானவை.
சல்மான்கான் வேண்டுமென்றால் சினிமா காட்சிகளில், தோட்டா தாக்கிய பின்னரும் எழலாம். அவரது ‘மிளிரும் டியூப்லைட்’டை ஏராளமான தடவை நான் பார்த்திருக்கிறேன். அண்டை நாட்டு நடிகர்கள் மீது அதிக அன்பு இருந்தால், சல்மான்கான் பாகிஸ்தான் சென்று நடிக்கட்டும்.
திரையுலகம் தங்களது வியாபாரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. முதலில், ‘நம் நாடு தான் முதன்மை’ என்பதை கலைஞர்கள் உணர வேண்டும். ஏனென்றால், சமூகத்தில் இருந்து கலைஞர்களை பிரித்துவிட முடியாது.
இவ்வாறு ராஜ் தாக்கரே தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply