ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

மணல் குவாரிகளை நடத்தி பல நூறு கோடி ரூபாயை முறைகேடாக சம்பாதித்த தொழிலதிபர் சேகர் ரெட்டி வருமான வரித்துறையினரிடம் பிடிபட்டடார். அவர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் சிக்கியது. அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.சேகர் ரெட்டிக்கும் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராம மோகன ராவ் அவரது மகன் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று முழுவதும் சோதனை நடத்தினர். தலைமைச் செயலக அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ராமமோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனை நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த கிரிஜா வைத்தியநாதன், நில நிர்வாகம் மற்றும் வருவாய் துறை ஆணையராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். அத்துடன், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1981ம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், முதுகலை இயற்பியல் பட்டதாரி ஆவார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் உயர் பதவிகளை வகித்து வந்த இவர், இன்று தலைமைச் செயலாளராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply