பிரதமர் பதவி விலக கோரி மம்தா பானர்ஜி போர்க்கொடி – மாநிலம் முழுவதும் போராட்டம்

பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் நோட்டு திட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.அவர், இது தொடர்பாக கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மோடியின் தலைமையில் இந்த நாடு பாதுகாப்பாக இல்லை. ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடு முழுவதும் எல்லா தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கிகளில் பணம் இல்லை. இதற்கு தீர்வு காணவும் அரசுக்கு தெரியவில்லை.

காலையில் சூரியன் உதிப்பதில் இருந்து மாலையில் சூரியன் அஸ்தமனமாவது வரை ரூபாய் நோட்டு சம்பந்தமாக ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டு கொண்டு இருக்கிறார்கள். இதுவரை 126 முறை அறிவிப்புகள் வந்துள்ளன.

இந்த அரசை யார் நடத்துகிறார்கள் என்பது கூட தெரியவில்லை. அலிபாபாவும், அவருடைய சீடர்கள் 4 பேரும் சேர்ந்து அரசை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். நிதித்துறை மந்திரிக்கு கூட எதுவும் தெரியாமலேயே எதுவும் நடக்கிறது.

ரூபாய் நோட்டு பிரச்சினையால் 10 கோடி பேர் இதுவரை வேலை இழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியவில்லை. 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இது போல் இன்னும் ஏராளமான பேரழிவுகள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது.

இத்தனை பாதிப்புகளையும் பொதுமக்கள் சந்திக்கும் சூழ்நிலை உள்ளது. மோடி, நாட்டின் வளர்ச்சியை அழித்து விட்டார். அவர் இனிமேலும் பதவியில் நீடிப்பது சரியாக இருக்காது. நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும். அவரை பதவி விலக வற்புறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வருகிற 1-ந் தேதி போராட்டத்தை தொடங்குகிறோம். மோடியை விரட்டுவோம், தேசத்தை காப்போம் என்ற கோ‌ஷத்துடன் இந்த போராட்டம் நடக்கும். 8-ந் தேதி வரை இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறும். அதன் பிறகு அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம்.

ரூபாய் நோட்டை ஒழித்தது சம்பந்தமாக பிரதமர் மோடி இதுவரை அதிகாரப்பூர்வமாக பாராளுமன்றத்திலோ, மேல்-சபையிலோ எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இதுபற்றி ஜனாதிபதியிடம் புகார் தெரிவிப்போம்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply