ஜெயலலிதா, சசிகலாவின் 68 சொத்துகளை பறிமுதல் செய்ய கலெக்டர்களுக்கு உத்தரவு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.பெங்களூர் சிறப்பு கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தனர். இதையடுத்து கர்நாடகா ஐகோர்ட்டு, 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.

சுப்ரீம் கோர்ட்டு அந்த வழக்கை விசாரித்து கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அதன் பேரில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய 4 பேருக்கும் சொந்தமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுபற்றி விசாரணை கோர்ட்டு ஆய்வு செய்தது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் 128 சொத்துகள் கையகப்படுத்தப்பட்டிருந்தன.

அந்த சொத்துகள் பற்றி ஆய்வு செய்த கோர்ட்டு 68 சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இந்த 68 சொத்துகளும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவாரூர், தூத்துக்குடி உள்பட 6 மாவட்டங்களில் உள்ளது.

இந்த 68 சொத்துகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தற்போது தமிழக அரசு தொடங்கி உள்ளது. இதையடுத்து தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் (டிவிஏசி) 6 மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது.

அந்த கடிதத்தில், “ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்யுங்கள்” என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அவசர, அதிரடி உத்தரவைத் தொடர்ந்து 4 பேரின் 68 சொத்துகள் விரைவில் தமிழக அரசின் சொத்துகளாக மாற உள்ளது.

இது தொடர்பாக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனின் 68 சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். இந்த 68 சொத்துகளும் 20 ஆண்டுகளுக்கு முந்தைய வழிகாட்டு மதிப்பு விலைக்கு குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போதைய சந்தை மதிப்புடன் ஒப்பிடுகையில் மிக, மிக குறைவான மதிப்புடையதாகும்.

என்றாலும் இந்த 68 சொத்துகளின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும். இந்த 68 சொத்துகளில் உள்ள நிலம், வீடு பற்றி கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அது முடிந்ததும், “இந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமான இடம்” என்ற அறிவிப்பு பலகையை மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் நிறுவுவார்கள்.

இந்த 68 சொத்துகள தொடர்பான எந்தவித பரிமாற்றத்தையும் அனுமதிக்கக் கூடாது என்று பத்திரப் பதிவுத் துறைக்கும் அறிவுறுத்தப்படும். எனவே இனி இந்த 68 சொத்துகளும் தமிழக அரசின் சொத்தாக மாறும். தமிழக அரசு அதை எந்த துறையின் பயன்பாட்டுக்கும் செயல்படுத்தலாம்.

இல்லையெனில் அந்த சொத்துகளை விற்று பணம் திரட்டலாம். அது தமிழக அரசின் விருப்பத்தை பொருத்தது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட அபராதத்துக்கும், இந்த சொத்துகள் பறிமுதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

குற்றவாளிகளின் அபராதத்துக்கு ஈடாக இந்த 68 சொத்துகள் பறிமுதல் செய்யப்படவில்லை. முறைகேடாக வாங்கப்பட்டவை அரசுடமையாக்கப்படுகிறது.

தமிழக அரசு பறிமுதல் செய்யும் 68 சொத்துகளும் 6 நிறுவனங்களின் பெயர்களில் உள்ளன. எலக்ஸ் பிராப்பரட்டி டெவலப் மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், எமடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமி டெட், ராமராஜ் அக்ரி பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ், ரிவர்லே அக்ரோ பிராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தோ தோகா கெமிக்கல்ஸ் பார்மசூட்டிகல்ஸ் ஆகியவையே அந்த 6 நிறுவனங்களாகும்.

இந்த 6 நிறுவனங்கள் பெயரில் உள்ள அசையா சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். இந்த 6 நிறுவனங்களின் கணக்கில் வராத பெரும் தொகைகள் ஜெயலலிதா, சசிகலாவின் வங்கி கணக்குகளில் மாற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த 6 நிறுவனங்களின் சொத்துக்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்டதும், அது பற்றி தமிழக அரசு விசாரணையை நீதிமன்றத்துக்கு தெரிவிக்கும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதன் மூலம் நீதிபதி குன்காவின் தீர்ப்பு முழுமையாக அமலுக்கு வருகிறது.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை தனியாக வசூலிக்கப்படும். 4 பேரின் வங்கி கணக்குகளில் உள்ள பணம் அபராதத் தொகைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதுவும் போதவில்லையென்றால் அவர்கள் தங்க, வைர நகைகள் ஏலம் விடப்பட்டு பற்றாக்குறை சரி செய்யப்படும்.

மீதமுள்ள தங்க, வைர நகைகளை தமிழக அரசு கையகப்படுத்தி கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதா சசிகலாவின் தங்க, வைர நகைகளும் தமிழக அரசு வசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply