கடும் மழை, வெள்ளம், மண்சரிவு: 44 மாணவர்கள் உயிரிழப்பு

நாட்டில் பெய்த தொடர் அடை மழை, மண்சரிவு காரணமாக 44 மாணவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் எட்டுப் பேர் காணாமல் போயுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஏற்கனவே இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படுமென தெரிவித்திருந்தோம். ஆனால் இயல்பு நிலைமாறாததால் பாடசாலைகளை மீளவும் திங்கட்கிழமை திறப்பது தொடர்பான மறு அறிவித்தல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுமெனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

 

நேற்று கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவயிலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் வெள்ளம், மண்சரிவால் பல மாவட்டங்களில் பாடசாலை கட்டடங்கள் பாதிப்படைந்துள்ளன. பாதிப்புக்குள்ளான பாடசாலைகளில் எதிர்வரும் நாட்களில் திருத்த வேலைகள் ஆரம்பமாகும். பல பாடசாலைகளில் வீடுகளை இழந்தோர் தஞ்சமடைந்துள்ளனர்.

 

இந்த இயற்கை அனர்த்தத்தின் மூலம் மாணவ சமூகம் தங்களது அனைத்து உடமைகளையும் இழந்துள்ளது. பாடசாலை மாணவர்கள் மீண்டும் வருவதற்கு சீருடைகள் அவசியமல்ல. தேவையான உடைகளில் சிறிது காலத்திற்கு இம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகைத் தர அனுமதிக்கப்படுவர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ சமூகத்திற்கு இலவச சீருடை சப்பாத்து, அச்சு புத்தகங்கள், அப்பியாச புத்தகங்கள் வழங்கப்படும். இன்று எமக்கு இம் மாணவ சமூகத்திற்கு வழங்க கற்றல் உபகரணங்கள், பேக், சப்பாத்துக்கள், அப்பியாசக் கொப்பிகள், மருந்து வகைகள் தேவையாக உள்ளது. இவ் உபகரணங்களை வழங்க முன்வருவோர் எம்மிடம் தொடர்பு கொள்ள முடியும்.

 

மாணவ சமூகம் பாதிக்கப்பட்டது போன்று ஆசிரியர்களும் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். ஆசிரியர் சமூகத்திற்கு கூட்டுறவு சங்க சிக்கன கடன் திட்டம் மூலமாக கடன் பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply