புலிகள் அமைப்பின் செயற்பாடுகளால் அழிவுகள் ஏற்படுமென எடுத்துக்கூறியதால் தாக்கப்பட்டேன் : டக்ளஸ்

எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளினால் அதன் உறுப்பினர்கள் மாத்திரமின்றி நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அழிவுகள் ஏற்படும் என்பதை தான் எடுத்துக் கூறியமையால், தனக்கு களுத்துறை சிறைச்சாலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்துள்ளார். எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளினால் 1998 ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுவதாக அறிந்தவுடன், அங்கு சென்று அவர்களுக்கு விடயங்களை எடுத்துக்கூறி அந்த உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதாக டக்ளஸ் தேவானந்தா இன்று மன்றில் குறிப்பிட்டுள்ளார்.

எல்.ரி.ரி.ஈ அமைப்பின் செயற்பாடுகளை தான் விமர்சித்தமையால் ஆவேசப்பட்ட எல.ரி.ரி.ஈ. சந்தேகநபர்கள் களுத்துறை சிறைச்சாலைக்குள் தன்னைத் தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சாட்சியம் வழங்கியுள்ளார்.

1998 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது கூரிய மற்றும் வேறு சில ஆயுதங்களைக் கொண்டு டக்ளஸ் தேவானந்தாவைக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளபட்டமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எல்.ரி.ரி.ஈ அமைப்பின் வடக்கு, கிழக்கு நிதிப்பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த அன்ரனி எமில்காந்தன் உள்ளிட்ட 16 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் அவர்களில் அதிகமானவர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தமையால் 14 ஆவது பிரதிவாதியான பொன்னுசாமி ஶ்ரீசங்கராஜா என்பவரே நீதிமன்றத்தில் தொடர்ந்தும் ஆஜர்படுத்தப்படுகின்றார்.

இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply