போதிய கலந்துரையாடல் மூலமே சிறந்ததொரு அரசியலமைப்பு சாத்தியம்
போதியளவு கலந்துரையாடல்களை நடத்துவதன் ஊடாகவே சிறந்ததொரு அரசியலமைப்பை உருவாக்க முடியும். சகல தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவது என்ற உத்தியைக் கையாண்டதன் ஊடாகவே தென்னாபிரிக்காவின் அரசியலமைப்பை வெற்றிகரமாகத் தயாரிக்க முடிந்தது என அந்நாட்டின் முன்னாள் பிரதி பிரதம நீதியரசர் மொசெனெகே கொழும்பில் தெரிவித்தார்.
அரசியலமைப்பு என்பது பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை அதிகாரம் செய்வதற்கான அனுமதி அல்ல. சகல தரப்பினருக்கும் சமமான உரிமைகளை உறுதிப்படுத்துவதே சிறந்த அரசியலமைப்பாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான மாநாடு நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அரசியலமைப்பு சபை செயலகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி பிரதம நீதியரசர், அரசியலமைப்பு தயாரிப்பில் தென்னாபிரிக்கா பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
காலணித்துவ ஆட்சியிலிருந்த தென்னாபிரிக்கா சுமார் 320 வருட யுத்தத்துக்கு முகங்கொடுத்த நிலையிலேயே அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்திருந்தோம். சகல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்துவது என்பது நாம் முதன் முதலில் அடிப்படையாக முடிவுசெய்த விடயம். ‘பேச்சுவார்த்தைகள் பற்றிய கலந்துரையாடல்கள்’ முதலில் முன்னெடுக்கப்பட்டன. குழப்ப காலத்தில் ஒருவரால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம். சகல தரப்புடனும் நாம் கலந்துரையாடினோம்.
இவ்வாறு நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் ஊடாக இடைக்கால அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டது. நான்கு வருட கலந்துரையாடல்களின் பின்னர் 1993ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் இடைக்கால அரசியலமைப்பு சமர்ப்பிக்கப்பட்டது.
அரசியலமைப்பை நாம் தயாரிக்கும்போது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளாக இருக்கவில்லை.
யுத்தம் தொடர்ந்தமையால் மக்களின் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களால் அரசியலமைப்பை தயாரிக்கும் சூழல் இருக்கவில்லை. எனவே அரசியலமைப்பின் சட்டபூர்வத்தன்மை குறித்தும், ஏனைய விடயங்கள் குறித்தும் மக்களுடன் பரந்துபட்ட கலந்துரையாடல்களை நடத்தினோம். அரசியலமைப்பின் கொள்கைகள் பற்றி நாம் நீண்டகாலம் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தோம்.
அது மாத்திரமன்றி அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, எல்லையில் உள்ள படையினரை தக்கவைப்பது, மோசமான சட்டங்களை நீக்குவது போன்ற நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாடுகளையும் நாம் அப்போது முன்னெடுத்திருந்தோம். போதியளவு கலந்துரையாடல்களை நடத்துவது என்ற உத்தியை பயன்படுத்தியே அரசியலமைப்பை நாம் வெற்றிகரமாகத் தயாரித்திருந்தோம்.
பாரிய கேள்விகளுக்கு விடை தேடவேண்டிய விடயங்களில் முக்கியமான தரப்புக்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. கலந்துரையாடல்களின் போது இணக்கப்பாடு ஏற்படாத சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவிட்டு இடைவெளி எடுத்துக் கொண்டோம். நிலைமை சுமுகமானதும் மீண்டும் அது பற்றிய பேச்சுக்களை ஆரம்பித்தோம். இதற்கு உதாரணமா சில விடயங்களைக் குறிப்பிடலாம். போராளிகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலானவர்கள் அதிகாரிகளாக இருந்தனர்.
அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கூடாது. காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என ஒரு சாரார் கூறினர். எனினும், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என பிறிதொரு சாரார் வலியுறுத்தினார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் கலந்துரையாடல்களை நடத்தி அடிமட்டத்தில் இணங்கக் கூடியதொரு விடயத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அதனை இடைக்கால அரசியலமைப்பில் உள்ளடக்கினோம்.
இவ்வாறான விடயங்களில் சகல தரப்பினரின் கருத்துக்களையும் கவனமாக செவிமடுத்து இறுதியாக இணங்கக் கூடிய எல்லையில் இணக்கத்தை ஏற்படுத்துவதே பொருத்தமான அணுகுமுறையாகும். காணிப் பிரச்சினை, சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகள் இந்த நடைமுறையைப் பயன்படுத்தியே தீர்வுகாணப்பட்டது.
அதேநேரம், அரசியலமைப்பு என்பது பெரும்பான்மையினத்தவர்கள் சிறுபான்மையினத்தவரை நிர்வகிப்பதற்கான அனுமதியோ அல்லது அங்கீகாரமோ இல்லை. சகலரும் சமமாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்துவதாகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply