இலங்கை அரசுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் – சிறிசேனாவிடம் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உறுதி
இலங்கை அரசுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் என்று இலங்கை அதிபர் சிறிசேனாவிடம் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்தார். இலங்கையின் கொழும்பு நகரில் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளின் மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி மாநாட்டின் துணைத் தலைவரும், இந்திய வெளியுறவு மந்திரியுமான சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் சிறிசேனாவை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இரு நாடுகளும் பொருளாதார நிலைமை மற்றும் உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகள் குறித்து சரியாக உணர்ந்து கொண்டுள்ளன. எனவே இரு நாடுகளுக்கு இடையே எந்த பிரச்சினை குறித்தும் பேசி தீர்வு காண்பது பற்றியும், தற்போது நடைபெற்றுவரும் இரு நாட்டு கூட்டு திட்டங்கள் குறித்தும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, “இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளின் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா தனது முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்கும். தேவையான எரிசக்தி மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் பாதையான இந்திய பெருங்கடல் பகுதி பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியம்” என்று இலங்கை அதிபரிடம் சுஷ்மா சுவராஜ் கூறினார்.
இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளின் நல்லுறவை மேம்படுத்தும் அதேசமயம் இந்நாடுகளின் இயற்கையான ஒற்றுமையை பாதுகாப்பதே இந்தியாவின் நோக்கம் என்றும் சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபரிடம் தெரிவித்தார்.
மாநாட்டின் நிறைவு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பேசியதாவது:-
இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிறைவேற்றவும், நட்பு நாடுகளுக்கு ஆதரவு கொடுப்பதையும் இலங்கை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. இங்கு விவாதிக்கப்பட்ட கருத்துகள், ஆலோசனைகள் அனைத்தும் இந்திய பெருங்கடலை அமைதி கடலாக மாற்றும்.
இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெற்றுவரும் விரும்பத்தகாத போர் நடவடிக்கைகள், போதை பொருள் கடத்தல், ஆள் கடத்தல் ஆகியவைகளை கட்டுப்படுத்துவது பற்றியும் இந்த மாநாடு கவனத்தில் கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் இந்திய பெருங்கடல் பகுதியில் இல்லாத நாடுகளான சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட சுமார் 30 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டு முடிவில் பாரதீய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் ராம் மாதவ் இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு சிறப்பு நினைவு பரிசை வழங்கினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply