வடகொரியா சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை: உலக நாடுகள் கடும் அதிர்ச்சி

பொருளாதார தடைகளையும் மீறி வடகொரியா நேற்று அணுகுண்டு சோதனை நடத்தியது. இதனால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐ.நா. மற்றும் உலக நாடுகள், வடகொரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. எனினும், அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து வடகொரியா அமெரிக்காவை பகிரங்கமாகவே மிரட்டி வருகிறது.

இந்நிலையில், வடகொரியா நேற்று 6-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. இதனால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதுகுறித்து தென்கொரிய வானிலை ஆய்வு மையம் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடகொரியா 5-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது.

அதைவிட 5 அல்லது 6 மடங்கு சக்திவாய்ந்த அணுகுண்டை வடகொரியா சோதனை செய்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் அணுகுண்டு ஏவுகணை வீசித் தாக்கும் திறன் வடகொரியாவிடம் உள்ளதாக தெரிகிறது’’ என்று கூறியுள்ளது.

தென்கொரிய ராணுவம் கூறும்போது, ‘‘வடகொரியாவின் ஹம்கியாங் மாகாணத்தில் உள்ள கில்ஜு என்ற இடத்தில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் 5.7 ரிக்டர் அளவுக்கு செயற்கை நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகி உள்ளது’’ என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா உடனடியாகக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் முதல் முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் லேசான அதிர்வுகள் ஏற்பட்டதாக சீனா, அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வடகொரிய தொலைக்காட்சியில் இதுகுறித்து செய்தி வெளியிடப்பட்டது.

அதில் செய்தி வாசித்தவர், ‘‘அணுகுண்டு சோதனை முழு வெற்றி’’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரடியாக கண்காணித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், நேற்று ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

ஜப்பான் கடும் கண்டனம்

இதனால் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. வடகொரியாவுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறும்போது, ‘‘வடகொரியாவின் அணுகுண்டு சோதனையை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னொரு அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா முயற்சித்தால், அதை நாம் அனைவரும் சேர்ந்து கடுமையாக எதிர்க்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

சர்வதேச அணுசக்தி கழகத் தலைவர் யுகியா அமனோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘வடகொரியாவின் செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது. சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அதை மீறி அணுகுண்டு சோதனை நடத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

வடகொரியா முதன்முதலில் கடந்த 2006-ம் ஆண்டு அணு குண்டு சோதனை நடத்தியது. அதன்பின் 2009 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் தலா ஒரு சோதனை நடத்தியது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 5-வது சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அவை அனைத்துமே அணுகுண்டு சோதனைதான். ஆனால், வடகொரியா நேற்று நடத்தியது ஹைட்ரஜன் குண்டு சோதனை என்றும், அதை ஏவுகணையில் பொருத்தி தாக்குதலுக்கு தயாராக வைப்போம் என்றும் கூறியுள்ளது. அணுகுண்டை விட ஹைட்ரஜன் குண்டு பல மடங்கு சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply