ராணுவ மந்திரி பதவி எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்’ நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ராணுவ மந்திரி பதவி, எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் கூறினார்.ராணுவ மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர், கடந்த மார்ச் மாதம் கோவா முதல்–மந்திரி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் ராணுவ மந்திரி பதவியை விட்டு விலகினார். நிதி மந்திரி அருண் ஜெட்லி, ராணுவ இலாகாவை கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். அவர் வர்த்தக, தொழில் துறையை தனிப்பொறுப்பாக கவனித்து வந்த ராஜாங்க மந்திரி பதவியில் இருந்து, நிர்மலா சீதாராமனை கேபினட் மந்திரியாக அந்தஸ்து உயர்த்தி, அவரை புதிய ராணுவ மந்திரி ஆக்கினார். இதன்மூலம் ராணுவ மந்திரி பதவியை முழு நேர பொறுப்பாக ஏற்கிற முதல் பெண் என்ற பெயரையும், முதல் தமிழ்ப்பெண் என்ற சிறப்பையும் நிர்மலா சீதாராமன் ஒருசேர பெற்றுள்ளார்.
மிகப்பெரிய அங்கீகாரம்
பதவி ஏற்ற பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ‘‘ராணுவ மந்திரி பதவி என்பது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம். நான் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், நேர்மையுடனும் அந்த பொறுப்பினை நிறைவேற்றுவேன்’’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், ‘‘நான் மக்களுக்கும், அதிகாரத்தில் இருப்போருக்கும் இடையே, குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து வந்து அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இடையே பாலமாக இருப்பேன்’’ என்றும் கூறினார்.
அருண் ஜெட்லி கருத்து
புதிய மந்திரிகளுடன், பிரதமர் மோடி நேற்று காலை விருந்துடன் நடத்திய சந்திப்பு பற்றி நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘அது சாதாரண முறையிலான ஒரு சந்திப்பு. ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ள உதவியது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வசதியாக ஒவ்வொருவரும், ஒருவருக்கொருவர் ஒத்திசைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்’’ என்றார்.
மந்திரிசபை மாற்றத்துக்கு பின்னர் அருண் ஜெட்லி நிருபர்களிடம் பேசும்போது, ‘‘இந்த மந்திரிசபை மாற்றத்தில் நிர்மலா சீதாராமனுக்கு ராணுவ மந்திரியாக பதவி உயர்வு அளித்திருப்பது குறிப்பிடத்தகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் ஆகும். அவர் சிறப்பாக செயல்படுகிற மந்திரி. அதனால்தான் அவர் உயர்ந்த பொறுப்பினைப் பெற்றுள்ளார்’’ என்று கூறினார்.
அத்துடன், ‘‘எனது இடத்துக்கு மிகவும் தகுதி வாய்ந்த ஒருவரை பெற்றிருக்கிறேன் என்பதை உறுதிபட சொல்வேன். அவர் இந்த துறையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வார்’’ என்றும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply