“லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்”: தெலுங்கானா முதல்-மந்திரி பரபரப்பு பேச்சு

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள் என்று தெலுங்கானா மாநில முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவ் பேசினார். ஆந்திராவில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே.சந்திரசேகர ராவ் முதல்-மந்திரியாக இருக்கிறார்.

மாநிலத்தில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்க தொழிற்சங்க தேர்தலில் அவரது கட்சியின் தொழிற்சங்கம் வெற்றி பெற்றது. அதற்கு பாராட்டு தெரிவிப்பதற்காக, சிங்கரேணி நிலக்கரி சுரங்க பகுதிக்கு அவர் சென்றார். அங்கு நிலக்கரி சுரங்க தொழிலாளர்களிடையே அவர் பேசினார். அப்போது, நிலக்கரி நிறுவனத்தில் பெருமளவில் ஊழல் நடப்பதாக அவரிடம் தொழிலாளர்கள் முறையிட்டனர்.

அதைக்கேட்ட முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவ், தொழிலாளர்களிடையே பேசியதாவது:-

இங்கு எல்லாவற்றுக்கும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் வந்துள்ளது. உடல்நலக்குறைவு என மருத்துவ போர்டிடம் சான்றிதழ் பெறுவதற்கு ரூ.6 லட்சம் லஞ்சம் தர வேண்டியுள்ளது. காய்ச்சல் காரணமாக விடுமுறை பெறுவதற்கு கூட அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. ஊழியர் குடியிருப்பை மாற்றுவதற்கும் லஞ்சம் கேட்பதாக தெரிகிறது.

ஆனால், நாளை முதல் யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம். எந்த அதிகாரியாவது லஞ்சம் கேட்டால், அவரை செருப்பால் அடியுங்கள். லஞ்சம் கொடுப்பவர்களையும் செருப்பால் அடியுங்கள்.இவ்வாறு கே.சந்திரசேகர ராவ் பேசினார்.

அவரது பேச்சு, அதிகாரிகளிடையே சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் பிரச்சினையில் கடந்த 40 மாதங்களாக உரிய கவனம் செலுத்தாததற்காக, தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சந்திரசேகர ராவ் கூறினார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply