போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை:ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை விசேட உரை நிகழ்த்திய சந்தர்ப்பத்திலேயே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக இதன்போது உறுதியளித்துள்ளார்.

மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கைகளின் போது அதனை தடுக்கும் வகையில் மனித உரிமை செயற்பாட்டளார்கள் முன்வர வேண்டாம் எனவும் ஜனாதிபதி இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறந்த நல்லொழுக்கம் கொண்ட நாடொன்றை உருவாக்கும் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பலர் கடந்த காலங்களில் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அத்துடன் பெருமளவான சட்டவிரோத போதைப்பொருள்கள் கடந்த சில தினங்களாக அதிகளவில் கைப்பற்றப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை தான் ஜனாதிபதி செயலகத்திடம் கையளித்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்திருந்தார்.

எனினும், தன்னால் கையளிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து ஜனாதிபதி இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply