நாட்டின் பல பகுதிகளில் 30ஆம் திகதி வரையில் கடும் மழை!

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை வரை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்தோடு நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
குருநாகல் மற்றும் கண்டி மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதேவேளை, சூரியனின் தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று திருக்கேதீஸ்வரம், வட்டக்கண்டல், பாலைமோட்டை, பராக்கிரமபுர மற்றும் கல்லராவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.12 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply