கும்பகோணத்தில் சாதி பெயரை கூறி திட்டிய பேராசிரியர் : கல்லூரி மாணவி ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுவாமிமலை அருகே ஆலமன் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் கவுசல்யா (வயது 23). இவர் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் எம்.எஸ்சி படிப்பை முடித்து விட்டு அரசினர் ஆடவர் கல்லூரியில் எம்.பில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவி கவுசல்யா தனது ஆய்வுக் கட்டுரையை பேராசிரியர் ரவிச்சந்திரன் என்பவரிடம் சமர்ப்பித்து உள்ளார். அப்போது ஆய்வு கட்டுரையை பேராசிரியர் ஏற்றுக்கொள்ளாமல் மாணவியை அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த நிலையில் பேராசிரியர் ரவிச்சந்திரனிடம் மாணவி சென்று விளக்கம் கேட்டு பேசியுள்ளார். இதனால் அவர் திடீரென மாணவியை சாதி ரீதியாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி கவுசல்யா நேற்று கல்லூரி ஆய்வகத்தில் இருந்த உயிருக்கு ஆபத்தான ரசாயனத்தை (ஆசிட்) எடுத்து குடித்து விட்டார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் கல்லூரி ஆய்வகம் அருகில் மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அருகில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்த மாணவியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மாணவியின் தாய் ஜோதி கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் சாதி பெயரை கூறி தனது மகளை திட்டிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பேராசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply