தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி : லண்டன் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிகின்ற அனைத்து டாக்டர்களையும் மனமார, உளமார இந்த நேரத்தில் பாராட்ட கடமைப்பட்டிருக்கின்றேன். அது மட்டுமல்லாமல், கிங்ஸ் மருத்துவமனையின் கிளை ஒன்றை தமிழகத்திலே அமைக்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்கள். அதற்கான முழு ஆதரவை தமிழக அரசு வழங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கு இருக்கின்ற மருத்துவ வசதிகள் அனைத்தும் தமிழக மக்களுக்கும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை இந்த கிங்ஸ் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு தமிழக அரசின் சார்பாக, மக்களின் சார்பாக நன்றியை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்ததில், கிங்ஸ் மருத்துவமனை உண்மையிலேயே ஒரு தலைசிறந்த மருத்துவமனையாக திகழ்கிறது. சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரும் திட்டம் பாராட்டுக்குரியது. இன்றைக்கு ராபின்ஸன் ஹெலிகாப்டர் இருக்கின்ற இடத்தை பார்வையிட்டோம். சென்னையிலும் அதனை அமைப்பதற்கு நாங்கள் ஏற்பாடு செய்யவிருக்கின்றோம்.

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தொலைதூரத்தில் இருந்து நகரத்திற்கு வந்து சிகிச்சை பெறமுடியாதபோது, விலை மதிக்க முடியாத உயிரை இழக்க நேரிடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலமாக குறித்த காலத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து நோயை குணப்படுத்தி அவர்களை பிழைக்க வைக்கக்கூடிய அரிய சாதனையை கிங்ஸ் மருத்துவமனை செய்து கொண்டிருக்கிறது.

அதுபோன்றே, தொலைதூரத்தில் உள்ள இடங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை குறித்த நேரத்தில் சிகிச்சை அளித்துக்காப்பாற்ற, தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு நிச்சயமாக செயல்படுத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply