கோவை இரட்டைக் கொலை- குற்றவாளியின் தூக்கு தண்டனையை மீண்டும் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

கோவை தனியார் பள்ளியில் படித்து வந்த சிறுமி முஸ்கான், அவளது சகோதரன் ரித்திக் ஆகியோர் கடந்த 2010ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அருகே உடல்கள் கைப்பற்றப்பட்டன. பிரேத பரிசோதனையில் சிறுமி முஸ்கான், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

தமிழகத்தை உலுக்கிய இந்த இரட்டைக் கொலை வழக்கில் வாடகைக் கார் டிரைவர் மோகன்ராஜ், நண்பர் மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மோகன்ராஜ் தப்பிச் செல்ல முயன்றபோது போலீசாரால் சுட்டுகொல்லப்பட்டார்.

மனோகரன் மீதான வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம், அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. இதனை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தன. இதையடுத்து தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி மனோகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த மனு மீது, நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குற்றவாளி மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்ததுடன், அவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply