அரசியல் தீர்வு : பேச்சு நடத்த கூட்டமைப்புக்கு அரசு அழைப்பு

“தமிழ் மக்களுக்கானத் தீர்வுப் பொதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தட்டில் வைத்துத் தரும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கனவு காண்பதில் எந்தவிதப் பயனும் இல்லை. முதலில் அவர்கள் எம்மிடம் நேரில் வந்து பேச வேண்டும்.” இவ்வாறு சபை முதல்வரும் வெளிவிவகார அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகின்றது. இதில் மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கான வியூகங்களைத்தான் தற்போது நாம் வகுத்து வருகின்றோம்.
இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஓரணியில் நின்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதே எமது இலக்கு.
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள எமது ஆட்சியில்தான் ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காணும் பணிகள் முன்னெடுக்கப்படும். சகல தரப்பினருடனும் பேசித்தான் தீர்வு காணப்படும்.
தமிழ் மக்களுக்கான தீர்வுப் பொதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தட்டில் வைத்துத் தரும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கனவு காண்கிறார்கள். அப்படி அவர்கள் கனவு காண்பதில் எந்தவிதப் பயனும் இல்லை. முதலில் அவர்கள் எம்முடன் நேரில் வந்து பேச வேண்டும். அவர்கள் எம்மிடம் நேரில் வந்து பேசப் பின்னடிக்கின்றார்கள். இரு தரப்பும் மனம் விட்டுப் பேசினால்தான் ஒரு முடிவுக்கு வரலாம்.
அதைவிடுத்து இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளைக் கூட்டமைப்பினர் நாடுவதால் தீர்வு கிடைக்கப்போவதில்லை. ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வகையிலும் பௌத்த மதத்துக்கு முதலிடம் வழங்கும் முகமாகவும் சிங்கள மக்கள் ஏற்கும் விதத்திலுமான அரசியல் தீர்வைத்தான் எம்மால் காண முடியும்” – என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply