கொரோனா நிவாரண உதவி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், 2 கோடி 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் 5 திட்டங்களில், கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டமும் ஒன்றாகும். நிவாரண நிதி ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் இந்த மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் வருகிற 15-ந்தேதி முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்ட ரேசன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, ரேசன் கடைகளில் கூட்டம் சேரக்கூடாது என்பதில் உணவுத் துறை அதிகாரிகள் விழிப்பாக உள்ளனர். அதனால், வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கி, அதன் அடிப்படையில் தினமும் 200 பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்று முதல் டோக்கன் வழங்கும் பணியும் வீடு வீடாக தொடங்க இருக்கிறது. ரேசன் கடை பணியாளர்களே இன்று முதல் 3 நாட்கள், ரேசன் கார்டு எண் அடிப்படையில் டோக்கன் வழங்க இருக்கின்றனர்.
அந்த டோக்கனில், ரேசன் கடையின் எண், பெயர், அட்டைதாரர் பெயர், கிராமம், தெரு, நிவாரண நிதி வழங்கும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. டோக்கன் எண்ணை குறிப்பிடுவதற்கு தனியாக காலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம். தொற்றில் இருந்து மீட்போம்’’ என்கிற கொரோனா விழிப்புணர்வு வாசகமும் அதில் இடம் பெற்றுள்ளது.
இந்த டோக்கன் வழங்கும் பணிகள் வரும் 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. வரும் 15-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சமூக இடைவெளியுடன் டோக்கன் அடிப்படையில் மட்டுமே ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட இருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply