தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய மாற்றத்திற்காக ஒன்றிணைய வேண்டும் : ப.உதயராசா
இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளவும் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட உடனடி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவும் பல சந்தர்ப்பங்களை பயன்படுத்தக் கூடிய வாய்ப்பிருந்தும் வாய்ப்புக்களை தவற விடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தம்மை கூறிக் கொள்பவர்கள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதிலாவது முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்.
எதிர்வரும் 20-07-2022-ல் இடம்பெறவிருக்கும் வாக்களிப்பில் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிகள் எவ்வாறு நடந்துகொள்ள போகின்றனர் என்பதனை தமிழ் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
தமது சுயநல அரசியலை முன்னிறுத்தாது நாட்டின் தற்போதைய சூழலையும் கருத்திற்கொண்டு ஜனாதிபதி தேர்வில் நிலவும் போட்டித் தன்மையை பயன்படுத்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைந்து சில உடனடி தீர்வுகளை பெற்றுக் கொள்வதுடன் அரசியல் தீர்விற்கான உத்தரவாதத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குறைந்தபட்ச பொது உடன்படிக்கை ஒன்றின் கீழ் ஒன்றிணையும் பட்சத்தில் புதிய ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்க முடியும் அதன்மூலம் வாக்களித்த தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச விமோசனத்தையேனும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து நான் பெரிது நீ பெரிது எனவும் நாம் மட்டுமே புனிதர்கள் ஏனையோர் துரோகிகள் எனவும் பல்வேறு கூறுகளாக பிரிந்து பேரம்பேசும் சக்தியை இழந்து நமது மக்கள் விரும்பாத இந்த நாட்டிற்கும் பயனற்ற தேர்விற்கு காரணமாக அமைவதன் மூலம் மீண்டும் தமிழ் இனத்திற்கு வரலாற்று தவறை பரிசளிக்காது புதிய ஒரு மாற்றத்திற்காக ஒன்றிணைத்து செயற்பட உறுதியெடுத்துக் கொள்வோம்.
நன்றி.
ப.உதயராசா
செயலாளர் நாயகம்
சிறி தமிழீழ விடுதலை இயக்கம்.
You can leave a response, or trackback from your own site.


Leave a Reply