மனித உடலில் உணரப்படும் வெப்ப நிலை அவதானத்துக்குரிய மட்டத்தில் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டில் கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்ப நிலை அவதானத்துக்குரிய மட்டத்தில் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வெளியிடங்களில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை இயன்றளவுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வெப்பக் காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், புத்தளம், பொலன்னறுவை, குருணாகல், கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு அதிகூடிய வெப்ப காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (21) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் அதிகூடிய வெப்பநிலை இரத்தினபுரி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. இம்மாவட்டத்தில் 36.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்பக் காலநிலையால் அதிகரிக்கும் உடல் உஷ்னத்தை குறைப்பதற்கு குளிர் நீர், தோடம்பழம், இளநீர் உள்ளிட்டவற்றை சீன சேர்க்காது எடுத்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்புக்கள் ஆலோசனை வழங்கியுள்ளன.
பெரியோர் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 லீற்றர் நீரை அருந்த வேண்டும் என்றும், அதிக உடல் பருமனுடையவர்கள் 3 லீற்றர் நீரையும், 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒன்றரை லீற்றர் நீரையும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு லீற்றர் நீரையும் பருக வேண்டும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மாறாக உடலுக்கு தேவையானளவு நீர் பருகுவதை தவிர்த்தால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ஞாபக மறதி போன்ற நோய்கள் ஏற்படும் என்றும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் நீண்ட நேரம் வெளியிடங்களில் இருந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிய பின்னர் குளிர் நீரில் குளித்தல் பொறுத்தமானது என்றும், வெளியிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் அல்லது சிறுவர்களை நீண்ட நேரம் தனித்து விட வேண்டாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. முடிந்தளவு வெளியில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடு;களை தவிர்த்துக் கொள்ளுமாறும், வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது இலகு நிற ஆடைகளை அணிந்து செல்லுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply