தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை: நபருக்கு சரீரப் பிணை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ. 5,000/- பெறுமதியான விசேட கிறிஸ்மஸ் பொதிகள் விநியோகிக்கப்படும் விற்பனை நிலையங்கள் வெள்ளிக்கிழமை (19) சுகாதார பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் முஹம்மது ஹனீபாவின் வேண்டுகோளுக்கு இணங்கவும் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌஷாத் முஸ்தபாவின் வழிகாட்டலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இச் சோதனை நடவடிக்கையின் போது பாரிய உணவு பாதுகாப்பு மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடந்த கால மின்சாரத் தடையினால் பதனிழந்த ஐஸ்கிரீம்களை உற்பத்தி நிறுவனத்திடம் மீள ஒப்படைப்பதாக தெரிவித்து அதற்கான அறிக்கையைப் பெற்றுக் கொண்டு அதே ஐஸ்கிரீம்களை மோசடியான முறையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தரம் குறைந்ததாக கண்டறியப்பட்ட அனைத்து ஐஸ்கிரீம்கள் நீதிமன்ற அனுமதியுடன் உடனடியாக அழிக்கப்பட்டன.மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய சம்மாந்துறையில் இயங்கும் அரச சார்பு அங்காடி ஒன்றுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் போது சம்பந்தப்பட்ட நபர் ரூ. 2 இலட்சம் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் சுகாதாரப் பிரிவு எந்தவித சமரசமும் இன்றி தொடர்ந்து கடுமையாக செயலாற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply