பல்வேறு விபத்துக்களில் தாய், மகன் உட்பட நால்வர் பலி

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் புத்தூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

புத்தூரிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களினதும் சாரதிகள், பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 6 வயது சிறுவன் ஆகியோர் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் புத்தூர் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பாதெனிய – அனுராதபுரம் வீதியின் குருந்தன்குளம் பகுதியில், அனுராதபுரத்திலிருந்து பாதெனிய நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த மூவர், லொறியின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஐவர் காயமடைந்து கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த ஏனைய இருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 29 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் என தெரிவிக்கப்படுகிறது.

கல்கமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கல்முனை – சாய்ந்தமருது வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கடற்கரை பள்ளிவாசல் திசையிலிருந்து சாய்ந்தமருது நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், எதிரே வந்த துவிச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் துவிச்சக்கரவண்டி செலுத்துனர், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் அதில் பின்னால் பயணித்தவர் காயமடைந்து கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துவிச்சக்கரவண்டி செலுத்துனர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கல்முனைக்குடி 01 பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply