கொஹுவளை துப்பாக்கிச் சூடு : காரணம் வௌியானது
கொஹுவளை, சரணங்கர வீதி, போதியவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசைப் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (03) தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர், துப்பாக்கிக்குப் பொறுப்பாக இருந்தவர், துப்பாக்கியைக் கடத்திச் சென்றவர் மற்றும் குற்றவாளிகளுக்குத் தங்குமிட வசதி செய்து கொடுத்தவர் என நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 25, 28, 33 மற்றும் 45 வயதுடைய தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையே நிலவும் மோதலின் விளைவாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 3 ரிவோல்வர் ரக துப்பாக்கிகள், 9 மி.மீ ரகத்தின் 10 தோட்டாக்களும், 50 கிராம் ஹெரோயினும், 55 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 30ஆம் திகதி கொஹுவளை, போதியவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply