கடந்த வருடம் நீரில் மூழ்கி சுமார் 388 பேர் உயிரிழப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
நாட்டில் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள் மற்றும் நீர்நிலைகளில் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் மாத்திரம் நீரில் மூழ்கி சுமார் 388 பேர் உயிரிழந்துள்ளதுடன், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24 பேர் மரணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேலும் குறிப்பிடுகையில்,நாட்டில் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் இடம்பெறும் விபத்துகள் வெகுவாக அதிகரித்து வருவதால் அதனைத் தடுக்கும் முகமாக பொலிஸ் கடற்பிரிவினர் நீர் நிலைசார்ந்த பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்குத் தேவையான விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அதற்கமைய சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் நீர்நிலைப் பகுதிகளில் மேலதிக உயிர்பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கும், உயிர்காப்பு உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நாடு முழுவதும் 31 பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் கடற்படைப் பிரிவினர் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதுவரை 71 உயிர்பாதுகாப்பு பிரிவுகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அத்தோடு இந்தப் பிரிவுகளின் கீழ் சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்ட 308 உத்தியோகத்தர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த வருடம் நீரில் மூழ்கிய நிலையில் 96 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 247 பேரை உயிர்பாதுகாப்பு பிரிவினர் மீட்டுள்ளதுடன், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 சுற்றுலா பயணிகள் உள்ளடங்களாக 33 பேரை மீட்டுள்ளனர்.
எனினும் நீர்நிலைகளைச் சார்ந்த பகுதிகளில் இடம்பெறும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. 2024 ஆம் ஆண்டு 595 பேரும், 2025 ஆம் ஆண்டு 388 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24 பேர் மரணித்துள்ளதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆகையால் பழக்கமில்லாத நீர்நிலைகள், அவதானம் மிக்க பகுதிகள் என அறிவுறுத்தப்பட்டுள்ள நீர்நிலைகளில் நீராடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply