30,000 அடி உயரத்தில் இருந்து பாய்ச்சல்: ஈரானில் அமெரிக்க மாலுமியை மீட்க எலைட் படை

ஈரான் வான்வெளியில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15இ (F-15E) போர் விமானத்தில் இருந்த இருவரில், விமானி (Pilot) பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான மற்றொரு மாலுமியைத் தேடும் பணி போர்க்களமாக மாறியுள்ளது. இவரை மீட்பதற்காக அமெரிக்க விமானப்படையின் மிகச்சிறந்த ‘பாராரெஸ்க்யூ’ (Pararescue – PJs) வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 30,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து, எதிரி நாட்டு எல்லைக்குள் ஊடுருவி, காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவம் அளித்து அவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் ‘ஹாலோ’ (HALO) முறையில் பயிற்சியளிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மீட்புப் படையினர் தற்போது ஈரானியப் புரட்சிகர பாதுகாப்புப் படையினருடன் (IRGC) நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. “ஒவ்வொரு வினாடியும் முக்கியமானது” என்ற அடிப்படையில், ஈரானிய மலைப்பகுதிகளில் மிகத் தாழ்வாகப் பறக்கும் எச்எச்-60 (HH-60) ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏ-10 (A-10) போர் விமானங்கள் இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றன. இந்தத் தேடுதல் வேட்டையின் போது ஒரு மீட்பு ஹெலிகாப்டர் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளான போதிலும், வீரர்கள் பின்வாங்காமல் தங்கள் பணியைத் தொடர்ந்து வருவது இந்த மிஷனின் தீவிரத்தை உணர்த்துகிறது.

மாயமான அந்த அமெரிக்க மாலுமியை உயிருடன் பிடிப்பவர்களுக்கு ஈரான் அரசு சுமார் 60,000 அமெரிக்க டாலர்களைப் (சுமார் 45,000 பவுண்டுகள்) பரிசாக அறிவித்துள்ளது. இதனால் ஈரானிய இராணுவத்துடன் சேர்ந்து உள்ளூர் பொதுமக்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். “எதிரி நாட்டு வீரரைச் சித்திரவதை செய்யாமல் பிடித்துத் தாருங்கள்” என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், அமெரிக்க மீட்புப் படையினர் அந்த மாலுமி ஈரானியப் படைகளிடம் சிக்காமல் இருக்கப் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் இந்த ‘காம்பாட் சர்ச் அண்ட் ரெஸ்க்யூ’ (CSAR) நடவடிக்கை, ‘ஆபரேஷன் எபிக் ப்யூரி’ போரின் மிக ஆபத்தான தருணமாகக் கருதப்படுகிறது. ஒருவேளை அந்த மாலுமி பிணைக்கைதியாகப் பிடிபட்டால், அது சர்வதேச அளவில் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால், அமெரிக்கச் சிறப்புப் படைகள் நேரத்தோடு போட்டிப் போட்டுக் கொண்டு தேடி வருகின்றனர். இஸ்ரேலிய உளவுத்துறையும் இந்தத் தேடுதல் பணிக்குத் தொழில்நுட்ப ரீதியாக உதவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply