400 நாட்களாகக் குவிந்த குப்பைகள்; “பூனை அளவுள்ள எலிகள்” : குப்பை மேடுகளால் நிலைகுலைந்த பர்மிங்காம் நகருக்கு விடிவுகாலம்
பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் ஊதியம் மற்றும் வேலை இழப்பு தொடர்பான சர்ச்சையால், கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம் தற்போது 16 மாதங்களைக் கடந்துள்ளது. இதனால் நகரின் மூலைமுடுக்கெல்லாம் குப்பைகள் மலைபோலக் குவிந்துள்ளன. பல இடங்களில் 5 அடி உயரத்திற்கு மேலாகக் குப்பை மேடுகள் காணப்படுவதால், அந்தப் பகுதிகளில் “பூனை அளவு பெரிய எலிகள்” நடமாட்டம் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். தெருக்களில் வீசும் கடும் துர்நாற்றம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளின் ஜன்னல்களைக் கூடத் திறக்க முடியாமல் தவித்து வந்தனர்.
சுமார் 400 துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுப்பட்ட இந்தத் தொடர் போராட்டத்தால், பர்மிங்காம் மாநகராட்சிக்குச் சுமார் £33 மில்லியன் (சுமார் 350 கோடி ரூபாய்) கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், அவை போதுமானதாக இல்லை. இதனால் நகரின் சுகாதாரம் முற்றிலுமாகச் சீர்குலைந்தது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகத்திற்கும், ‘யுனைட்’ (Unite) தொழிற்சங்கத்திற்கும் இடையே நிலவி வந்த முட்டுக்கட்டை, தற்போது ஒரு சுமுகமான உடன்பாட்டை நோக்கி நகர்ந்துள்ளது.
பர்மிங்காம் மாநகராட்சித் தலைவர் ஜான் காட்டன் (John Cotton), இன்று (ஏப்ரல் 27, 2026) வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிற்சங்கத்துடன் ஒரு புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், விரைவில் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். வரும் மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுவது ஆளும் கட்சியினருக்கு ஒரு நிம்மதியைத் தந்துள்ளது. இருப்பினும், தேங்கிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான டன் குப்பைகளை முழுமையாக அகற்றி நகரத்தைச் சுத்தப்படுத்த இன்னும் பல வாரங்கள் ஆகும் எனக் கருதப்படுகிறது.
தற்போது (ஏப்ரல் 27, 2026), இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வருவதை நகரின் பொதுமக்கள் பெரும் நிம்மதியுடன் வரவேற்றுள்ளனர். ஒரு நவீன நகரமானது முறையான கழிவு மேலாண்மை இன்றி எவ்வளவு விரைவாக ஒரு “குப்பை நகரமாக” மாறும் என்பதற்கு இந்தப் போராட்டம் ஒரு கசப்பான உதாரணமாக அமைந்தது. தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் மற்றும் பணிப் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் இந்த ஒப்பந்தத்தில் ஓரளவிற்கு ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பர்மிங்காம் நகரம் மீண்டும் தனது பழைய பொலிவைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply