மாஸ்கோ அணிவகுப்புக்கு மிரட்டல் விடுத்த ஜெலென்ஸ்கி; தூதரகங்களை வெளியேறச் சொன்ன ரஷ்யா : உச்சகட்டப் பதற்றத்தில் உலக நாடுகள்

ரஷ்யாவின் மிக முக்கியமான நாளாகக் கருதப்படும் மே 9 ‘வெற்றி தின’ கொண்டாட்டங்களை முன்னிட்டு, மே 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ரஷ்யா தற்காலிகப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த அணிவகுப்பை உக்ரைன் ட்ரோன்கள் மூலம் சீர்குலைக்க முயன்றால், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அரசு நிர்வாக மையங்கள் மீது “மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல்” (Massive Missile Strike) நடத்தப்படும் என ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதனால் கீவ் நகரில் உள்ள பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேசுகையில், “ரஷ்யாவின் இந்த வெற்றி தின அணிவகுப்பு தற்போது எங்களைச் சார்ந்தே இருக்கிறது. மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் (Red Square) எங்கள் நாட்டு ட்ரோன்கள் பறக்கும்” என்று எச்சரித்திருந்தார். அவரது இந்தக் கருத்து ரஷ்யாவைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. உக்ரைனின் நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களுக்கு அஞ்சி, வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டு மாஸ்கோ அணிவகுப்பில் டாங்கிகள், ஏவுகணைகள் போன்ற கனரக ராணுவ தளவாடங்கள் இடம்பெறாது என ரஷ்யா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ‘பரஸ்பர போர் நிறுத்தம்’ குறித்த பேச்சுக்கள் அடிபட்டாலும், களத்தில் தாக்குதல்கள் குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் மிரட்டலுக்குப் பதிலளித்துள்ள ஜெலென்ஸ்கி, “ரஷ்யா மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்; அவர்கள் போர் நிறுத்தத்தை மீறினால் நாங்களும் தகுந்த பதிலடி கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் அணிவகுப்பு நடைபெறும் நேரத்தில் ஏதேனும் தாக்குதல் நடந்தால், அது உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை அடுத்தகட்டத்திற்கு (Full-scale Escalation) கொண்டு செல்லும் என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற முக்கிய நகரங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. 50 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் இந்தப் போரில், ரஷ்யாவின் கௌரவமாகப் பார்க்கப்படும் இந்த அணிவகுப்பைச் சுற்றி இப்போது பெரும் பதற்றம் சூழ்ந்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் மாறி மாறித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், வரும் சனிக்கிழமை (மே 9) அன்று என்ன நடக்கும் என்பதை ஒட்டுமொத்த உலகமும் அச்சத்துடன் கவனித்து வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply