ஐ.தே.க.வினுள் உட்பூசல் அதிகரிப்பு முக்கியஸ்தர்கள் பலர் அரசுடன் இணைவு

ஏப்ரல் 12ம் திகதி நடைபெற உள்ள கட்சி தலைமைத்துவ மாற்றத்தை இலக்கு வைத்தே ஐ.தே.க. தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். ஐ.தே.க. வில் கட்சி உட்பூசல் அதிகரித்துள்ள நிலையில் ஐ.தே.க. ஆதரவாளர்கள் பெருமளவில் அரசாங்கத்துடன் இணைந்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு அமைச்சர்களான டளஸ் அலஹப்பெரும, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.

இங்கு உரை யாற்றிய அமைச்சர் டளஸ் அலஹப்பெரும,எதிர்வரும் 17ம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைத்தே ஐ.ம.சு. முன்னணி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கிறது. ஆனால், ஐ.தே.கவோ ஏப்ரல் 17ம் திகதி நடைபெற உள்ள கட்சி மறுசீரமைப்பைக் கருத்திற் கொண்டு பிரசாரம் செய்கிறது. இதனால் கட்சிக்குள் உட்பூசல் மேலும் அதிகரித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதால் தலையீடு செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை ஐ.தே.க. செயலாளர் கோரியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற மிக மோசமான உள்ளூராட்சி தேர்தல் முறைகேடு 1991ல் பிரேமதாஸவின் ஆட்சியில் நடைபெற்றது.

இதனை வெளிப்படுத்திய பிரித்தானிய தூதுவரை ஐ.தே.க. நாட்டை விட்டும் வெளியேற்றியது. அப்படியானவர்கள் நியாயமான தேர்தல் குறித்து பேசுவது நகைப்புக்குரியதாகும்.

காலி முகத்திடலில் உள்ள எல். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் சிலையுடன் அந்தக் காணியை விற்கப் போவதாக ரணில் கூறி வருகிறார். நாம் பண்டாரநாயக்கவை அவமதிப்பதாக ரணில் சொல்கிறார். ஆனால் ஐ.தே.க. போன்று நாம் பண்டாரநாயக்க மீது போலியான அன்பு வைக்கவில்லை.

1977 தேர்தலின் பின்னர் ஊருகொடவத்தை சுற்றுவட்டத்தில் இருந்த பண்டாரநாயக்கவின் சிலையை ரணிலின் ஆதரவாளர்கள் உடைத்து இழுத்துச் சென்று ஆற்றில் வீசிய வரலாறை யாரும் மறக்கவில்லை.

கரு ஜயசூரியவும், திஸ்ஸ அத்தநாயக்கவும் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை பற்றியும் பொருளாதாரம் பற்றியும் பேசுகின்றனர். ஆனால் யாழ் மக்களின் உரிமை பற்றியோ பொருளாதாரம், கலாசார உரிமை பற்றியோ பேசுவதற்கு ஐ.தே.க.வுக்கு தார்மீக உரிமை கிடையாது.

ஐ.தே.க.வே யாழ் மக்களின் பொருளாதாரத்தை அழித்தது. யாழ் நூலகத்தை அழித்த ஐ.தே.க. அவர்களின் கலாசார உரிமை குறித்து பேசுகிறது.

ஐ.தே.க. ஒரு போதும் மக்களின் அறிவுக்கோ மனதிற்கோ பேசிய கட்சியல்ல. வயிற்றுக்கே பேசி வருகிறது. காலநிலை மாற்றத்தினால் மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளதை ஏற்கிறோம். இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது குறித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றார். கடந்த 500 வருட காலத்தில் மேலைத்தேய ஆதிக்கம், தலையீடு உள்ள ஆட்சிகளே நடந்தன. 2005 ம் ஆண்டின் பின்னரே வெளிநாட்டு தலையீட்டுகளின்றி ஆட்சி நடைபெறுகிறது.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

கிராம மட்டத்தில் மக்கள் மத்தியிலே தேர்தல் பற்றிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது. ஏனைய தேர்தல்கள் போலன்றி பெருமளவு ஐ.தே.க. ஆதரவாளர்கள் அரசுடன் இணைந்து வருகின்றனர். 100 ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் கண்டியில் வைத்து அரசுடன் இணைந்தார்கள். ஐ.தே.க. செயலாளருக்கு தனது குண்டசாலை தொகுதிக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐ.ம.சு.மு.வுக்கே மக்கள் ஆதரவு வழங்குகின்றனர்.

ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி.

17 தடவைகள் தொடர்ச்சியாகத் தேர்தலில் தோல்வியடைந்து ஒரு கட்சித் தலைவராக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க சாதனை படைத்துள்ளார். ஐ.தே.க.வை கட்டியெழுப்புவதற்கு டொக்டர் கலீல், ரி.பீ. ஜயா, பாக்கீர் மாக்கார், அபூபக்கர், நெய்னா மரிக்கார் என பல முஸ்லிம் தலைவர்கள் உழைத்தனர். இன்று எவரும் ஐ.தே.க. வில் இல்லை. முஸ்லிம்கள் இன்று இந்த அரசாங்கத்திற்கே ஆதரவு வழங்குகின்றனர். கிராம மக்களின் வாக்குகள் ஐ.தே.க. வுக்கு கிடைக்காது.

வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பேராதரவு வழங்குகின்றனர். அங்குள்ள சகல உள்ளூராட்சி சபைகளையும் வெற்றிபெற வைக்க அவர்கள் காத்திருக்கின்றனர்.

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்ற கூட்டத்தில் ஐ.தே.க. தலைவர் அரசாங்கத்துக்கு எதிராகவே உரையாற்றினார். அவர் எதிர்க்கட்சித் தலைவரா உலக எதிர்க்கட்சித் தலைவரா என பலரும் கேட்டனர்.

தொழிலாளர் உரிமைகளைப் பறித்த ஐ.தே.க. இன்று தொழிலாளர் உரிமை குறித்து பேசுகிறது. ஐ.தே.க.வின் பொய் பிரசாரங்களை மக்கள் தற்பொழுது நம்புவதில்லை.

நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஐ.தே.க. ஸ்தாபகர் டி.எஸ். சேனாநாயக்கவுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் சுதந்திர தினத்தில் ஐ.தே.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply