கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை தமிழ் மக்கள் உதாசீனம் செய்துள்ளனர்

கிழக்கில் போட்டியிட்ட பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை தமிழ் மக்கள் உதாசீனம் செய்துள்ளனர். இதன் மூலம் வடக்கு கிழக்கின் இணைப்புக்குத் தடையாக இருந்த சக்திகளை அவர்கள் தூக்கி எறிந்துள்ளார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் நாம் 12 சபைகளின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளோம். அரசாங்கம் தனது வளங்கள் அனைத்தையும் அதிகாரங்களையும் பலத்தையும் பிரயோகித்தும் வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் மிரட்டியும் கூட எமது மக்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் என்ற உண்மையை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

கொள்கையில் பற்றுறுதி கொண்டவர்கள் என்பதையும் அற்பசொற்ப சலுகைகளுக்கு எப்போதும் விலை போகாதவர்கள், ஆசை வார்த்தைகளைக் கண்டு ஏமாறாதவர்கள். மிரட்டலுக்கு அஞ்சாதவர்கள் என்பதையும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரிக்கமுடியாத தாயகப் பிரதேசம் என்பதை இந்தத் தேர்தல் மக்கள் நன்கு வெளிப்படுத்தியுள்ளனர்.அரசாங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் ஆத்மார்த்தமாகப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்கள். இனியும் தாமதிக்காமல் எமது இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் என்று ஆணித்தரமாக தமது விருப்பத்தை அனைவருக்கும் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பு முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வே என்ற தமது ஆதங்கத்தையும் விருப்பத்தையும் மக்கள் இம்முறையும் வெளிப்படுத்தியுள்ளனர்.மீள்குடியேற்றம் பூர்த்தியடையாத நிலையிலும், வாழ்வாதாரத்தை மேற் கொள்ள முடியாத நிலையிலும் , பனி,மழை ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு கூடாரங்களில் வனாந்திரப் பிரதேசத்தில் வாழ்ந்த போதும் தமது ஜனநாயகக் கடமையை மறவாமல் வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.

சர்வதேச சமூகம் எமது மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து எமது இனப்பிரச்சினை தீர்வுக்கு காத்திரமான பங்களிப்பை ஆற்றும் என்று நாம் எதிர் பார்க்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி  செய்ய உள்ள அனைத்து பிரதேசசபை, நகரசபை உறுப்பினர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவிப்பதுடன் எமது உறவுகள் தொடர்ந்தும் வலுப்பெற்று, அமைய இருக்கின்ற சபைகளில் உங்கள் அனைவரதும் பங்களிப்பு இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply