அதிகாரப் பகிர்வு குறித்த உத்தேச யோசனைத் திட்டமொன்று அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவுளளது : TNA

அதிகாரப் பகிர்வு குறித்த உத்தேச யோசனைத் திட்டமொன்று அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ம் திகதி அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவும் இந்தப் பேச்சுவார்த்தைகள் வழியமைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

 
ஏப்ரல் மாதம் 7ம் திகதியும், 27ம் திகதியும் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயங்களை இல்லாதொழித்தல், விடுதலைப் புலி சந்தேக நபர்களை புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுதலை செய்தல் போன்ற விடயங்கள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது பேசப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு குறித்த விரிவான யோசனைத் திட்டமொன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளாகக் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

இன்னமும் 11000 இளைஞர் யுவதிகள் புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது உடனடியாக அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அரசாங்கத்துடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய பாரிய முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்ற போதிலும், பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் பயணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply