விநாயகபுரம் கடத்தலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவிப்பு
திருக்கோவில் விநாயகபுரம் பகுதியில் வைத்து 2008 ஆம் ஆண்டு தமது பிள்ளையை கருணா குழுவினர் கடத்திச் சென்றதாக அம்பாறையில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக் குழுவில் ஒரு தாயார் தெரிவித்ததாக வெளியான செய்தி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியது முதல் ஆயுத கலாசாரத்தில் நம்பிக்கையிழந்து எமது மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அரசியலில் பிரவேசித்து எமது மக்களுக்கு சேவையாற்றி வருகின்றேன்.
குறித்த காலப்பகுதியில் தனது முகாம் எதுவும் அப்பகுதியில் இயங்கவில்லை. அத்துடன் சீலன் என்பவரோ அல்லது ஜூட் என்பவரோ எமது கட்சியில் இல்லை. நான் -ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சின் உப தலைவராக நியமிக்கப்பட்டது தொடக்கம் அக்கட்சியின் உறுப்பினராகவே செயற்பட்டு வருகின்றறேன்.
அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட இருவரும் இப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடாக இப்பகுதியில் இயங்கி வந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அத்துடன் பாரதி என்பவருக்கும் எனக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை. அவர்களை நான் இயக்கியதும் இல்லை, அவர்களுடன் எந்த தொடர்பினையும் பேணியதும் கிடையாது.
இந்த நிலையில் குறித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் இவ்வாறான கருத்துக்கள் தெரிவித்தது தொடர்பில் ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதுடன் இந்த சம்பவத்துக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.
விடுதலைப் புலிகளுடனான போர் இலங்கையில் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகளை புனர்வாழ்வு முகாமில் இருந்து எனது தனிப்பட்ட செல்வாக்கைக் கொண்டு மீட்டு அவர்களை இந்த நாட்டின் சுதந்திர நீரோட்டத்தில் இணைத்துள்ளதை இம்மாவட்ட மக்கள் அறிவார்கள்.
அத்துடன் தற்போதும் வாடிக்கொண்டிருக்கும் வடகிழக்கு இளைஞர்களை மீட்பதற்கு பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன் அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்படும் வரை அவர்களுக்கு தேவையானவற்றை மேற்கொள்வதில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றேன்.
இவ்வாறான நிலையில் கடத்தவோ அல்லது ஒருவரை துன்புறுத்தவோ வேண்டிய தேவை எனக்கில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply