அரையிறுதிப் போட்டிக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி

இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. போட்டியை நேரடியாக கண்டுகளிக்க வரும் ரசிகர்கள் எவ்வித குழப்பங்களையும் ஏற்படுத்தாமல் போட்டியினை கண்டுகளிக்குமாறு பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

மதுபானம் அருந்திவிட்டோ அல்லது எடுத்துக்கொண்டோ வருபவர்கள் மைதானத்திற்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்தோடு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரப்பர் பட்டியினை அவர்கள் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும். உட்பிரவேசிப்பவர்கள் மைதானத்தை விட்டு வெளியேறியபின் மீண்டும் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதனால் போட்டி முடியும்வரை உள்ளேயிருந்து போட்டியினை கண்டுகளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக எவ்விதமான அச்சமும் கொள்ளத்தேவையில்லை முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். மைதானத்திற்குள் பட்டாசு மற்றும் மத்தாப்பு போன்றவற்றை எடுத்து செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.

இலங்கையில் நடைபெற்ற கடந்த போட்டிகளின் போது போட்டியினை நேரடியாக கண்டு களிக்க வந்த ரசிகர்கள் எவ்வித குழப்பங்களுமின்றி அதனை ரசித்தார்கள். அதேபோன்று இந்த போட்டியினையும் குழப்பங்களின்றி ரசிக்க வேண்டும்.

போட்டியினை நேரடியாக கண்டு களிக்கும் ரசிகர்கள் நினைத்த நேரத்தில் வெளியே செல்வதும் மீண்டும் உள்ளே வருவதுமானது பாதுகாப்பிற்கு சிக்கலாக அமைவதாலேயே அதனை தடை செய்துள்ளோம். ஏனைய பாதுகாப்பு நடைமுறைகள் யாவும் கடந்த போட்டிகளில் மேற்கொண்டதைப் போலவே இருக்கும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply