தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையின் முழு வடிவம்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தனது உத்தியோகபூர்வ தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன் முழு வடிவத்தை கீழே காண்க. உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல் – 2011 – ஜுலை 23 தேர்தல் அறிக்கை
இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு)
இலங்கையில் 2010 ஏப்பிரல் திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிந்து 15திங்கள் நிறைவதற்குள் உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல் ஒன்றுக்கு இருமுறை முகங்கொடுக்க மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்ந்த மக்கள் சுனாமிப் பேரலைக்குள் மூழ்கி அந்த அழிவிலிருந்தும் பேரவலத்திலிருந்தும் ஜந்து ஆண்டுகளாகியும் மீட்சி கொள்ளவில்லை. போர் முடிவடைந்து விட்டதாக அரசு அறிவித்த பொழுதிலும் தமிழ்ப் பிரதேச மக்கள் அந்தப் பேரவலத்திலிருந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னும் தங்கள் வாழ்விடங்களில் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை; வாழ்வாதாரங்களைத்தானும் மீளக்கட்டியெழுப்ப முடியவில்லை.
போர் முடிந்துவிட்டதென்ற செய்தியை விட அந்த முடிவின் விளைவுகள் பாரதூரமானவையாகவுள்ளன. அதன் விளைவுகள் வரலாற்று ரீதியான பாரம்பரியமிக்க தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளங்களையும் அத்திபாரத்தையும் அழித்தும் தகர்த்தும் வருகின்றன.
இரண்டாவது உலகப்போர் முடிவடைந்தும் ஜப்பான் நகரங்களான ஹிரோசிமாவிலும் நாகசாகியிலும் போரில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் விளைவுகள் இன்று வரை மனித குலத்தின் கருவறை வரை பாதிப்பை ஏற்படுத்திவருவதைப் போன்று இலங்கையில் வன்னிப் போரின் முடிவுகள் தமிழ் மானுடத்தைப் பாதித்து வருகின்றமையை நாம் அனுபவித்து வருகின்றோம். வரலாற்றுப் பெருமைமிக்க தமிழ்த் தேசிய இனம் வளமிக்க தமிழ்மொழி தமிழ்ப்பண்பாடு மனித நாகரிகம் அழிக்கப்படும் அவலத்தை நாம் எதிர்நோக்கி நிற்கின்றோம்.
அரை நூற்றாண்டிற்கும் மேலான பேரினவாத சித்தாந்தப் பரிணாமத்தினாலும் விரிவாக்கப்பட்ட அதன் அடிப்படையிலான ஆட்சி அதிகார இராணுவ நிர்மாணத்தினாலும் தமிழ்மொழி கலை பண்பாடு மற்றும் வாழ்விடங்களில் பெரும்பான்மைத்துவ செறிவைக் கொண்ட தமிழ் மக்களின் கட்டமைப்பையும் குடிமக்கள் பரம்பலையும் மாற்றியமைக்கும் தமிழர் நிலத் தொடர்ச்சியை முறித்துவிடும் பிளவுபடுத்தும் விதத்தில் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இராணுவப் பாதுகாப்புடன் இராணுவக் குடியிருப்புக்களும் சிங்களக் குடியமர்வுகளும் எங்கும் எதிலும் இராணுவத் தலையீடும் அரசு மற்றம் அரசு சாரா நிறுவனங்களின் நிர்வாகம் இராணுவமயப்படுத்தப்படுதலும்; சிங்கள குடியேற்றங்களினால் சிங்களமயமாக்கலும்; புத்த சமய சின்னங்களின் பரம்பலினால் பௌத்தமயமாக்கலும்; பொருளாதாரச் சுரண்டல்களும் சூறையாடல்களும் தமிழர் நில ஆக்கிரமிப்புகளும் தாராளமாகவே தமிழ்ப் பேசும் மக்களிடத்திலும் வாழ்விடங்களிலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
பாரம்பரியமாக மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வளமுடன் வாழ்ந்த மீனவர் சமூகம் கரையோரப் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு தென்னிலங்கை மீனவர் அப் பகுதிகளில் வாழ்வும் வளமும் பெற அனுமதிக்கப்படுகின்றனர். அத்தோடு ஆழ்கடல் மீன் பிடித்தலும் உயர் அழுத்த இயந்திரப் படகுகள் பயன் பாடும் தமிழ் மீனவர்களுக்கு தடைவிதிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்திய – இலங்கை மீனவர்களை மோதவிட்டு தமிழ் இன நலன் பாதிப்படையச் செய்யும் தந்திரோபாயங்களையே அரசு தொடர்கிறது.அவ்வாறே காலம் காலமாக விவசாயத்திலீடுபட்ட தமிழ் மக்கள் அப் பகுதிகளிலிருந்து துரத்தப்பட்டு அயலூர் சிங்களவர் தமிழர் பூமியில் விவசாய வளங்களை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டாமா?
1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடப்பாடு
இவற்றிலிருந்து தனித்துவமிக்க தமிழ்த் தேசிய இனமும் அதன் மொழி இன மத அடையாளங்களும் கலைபண்பாடு உள்ளிட்ட வாழ்விடங்களும்; அதன் அரசியல் அடிப்படை உரிமைகள் வாழ்வுரிமை மற்றும் மனித உரிமைகளும் உள்ளிட்ட சுயநிர்ணய உரிமைக்கோட்பாடு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய அவசரமும் அவசியமும் தமிழ்ப் பிரதேச மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கான மீள் எழுச்சித் திட்டங்களுக்கான வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டு ஜனநாயக விழுமியங்களையும் கோட்பாடுகளையும் பின்பற்றித் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கும் விடிவுக்கும் தம் நிலத்தில் தன்னாட்சிக்குமான இலக்குடன் எம் மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டியுள்ளோம்.
2.மக்களின் தெளிவான தேர்வும் எமது நன்றியும்
மேற்குறித்த அடிப்படையிலும் எதிர்நோக்கிலும் 2010ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலுக்கான எமது தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு மக்கள் முன் வைக்கப்பட்டது. மனிதாபிமானம் மனித உரிமைகள் ஜனநாயக விழுமியங்கள் சுயநிர்ணய உரிமைத் தத்துவம் உட்பட்ட அடிப்படை அரசியல் உரிமைகள் மீறப்பட்டிருந்ந நிலைமைகளிலும் ஜனநாயக ஒளிக் கீறு தென்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் மக்கள் முன் எம்மை ஒப்படைத்துள்ளோம். மக்களுக்காக எம்மை அர்ப்பணித்திருக்கின்றோம்.
இத் தேர்தல்கள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல்களின்போது முன் வைத்த அறிக்கையை ஏற்று அளித்த தீர்க்கமான வாக்களிப்பானது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் தமிழ் மக்களின் தொடர்ச்சியான பற்று உறுதிமிக்க கொள்கைத் திட்டத்தையும் இலட்சியப்பற்றையும் அதனை நிறைவேற்றும் திடசங்கற்பத்தையும் தெட்டத் தெளிவாகவே வெளிப்டுத்தியிருந்தன. இதனை இந்தியா உள்ளிட்ட சர்வதேச அரசுத் தலைவர்கள் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களும் நேரடியாக வரவேற்றன.
மேலும் வடக்குக் கிழக்கு மக்கள் குறிப்பாகக் கிழக்குப் பிரதேசத் தமிழ் மக்கள் சென்ற பொதுத்தேர்தலிலும் (2010)நடைபெற்ற ஊராட்சித் தேர்தலிலும் (2011) தெளிவான தீர்க்கமான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்பதையும் குறிப்பிட வேண்டும். அரசு தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்கும் நடவடிக்கையை எடுத்திருந்த பொழுதும் �நாம் ஓரே தாய் மக்கள் ஒரே தமிழர் தாயக மக்கள் நாம் இதயபூர்வமாய் உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் ஒன்றுபட்டு நிற்கிறோம்� எனும் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இவற்றிற் காக எம் மக்கள் மீதான விசுவாசமும் நன்றியும் எம் நெஞ்சமெல்லாம் பூரித்து நிற்கின்றன.
அத்துடன் தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளத்தையும் தனித்துவத்தையும் மக்களிடமே உரித்தாயுள்ள இறைமையையும் சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தையும் வாழ்வுரிமையையும் பேணிப் பாதுகாக்கும் உரிமையும் பொறுப்பும் எல்லா மக்களுக்கும் உண்டு என்பது நிரூப்பிக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் தமிழ்ப் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்தில் அவர் தம் வாழ்விடத்தில் தம்மைத் தாமே ஆளும் அடிப்படை உரிமையைப் பிரயோகித்து தன்னாட்சியை நிறுவவும் நிலை நாட்டவும் பாதுகாக்கவும் தமிழ் மக்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதியான பற்றையும் கடப்பாட்டையும் திடசங்கற்பத்தையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த உள்ளுர் ஆட்சி அதிகாரசபைத் தேர்தலிலும் நிருபிக்க வேண்டும். இது மக்களுக்கு உரித்தான ஜனநாயகக் கடமையாகும்.
3.அரசுடன் பேச்சும்இன்றைய நிலையும்
இதன் காரணங்களில் இன்று பலமிக்க முழுநிர்வாக அதிகாரத்தையும் பாராளுமன்றப் பெரும்பான்மைத்துவமிக்க பலத்தையும் கொண்ட ஜனாதிபதியும் அரசும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தையைத் தொடக்கியுள்ளமையை அறிவீர்கள் அப் பேச்சுவார்த்தையில் 1. இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் மீட்கப்படுதல். (வடக்கில் வலி வடக்கு உள்ளிட்ட பிரதேசங்களிலும் முல்லை மன்னார் வன்னியிலும் கிழக்கில் திருமலையில் சம்பூர் அம்பாறையிலும்) தங்கள் சொந்த நிலங்களில் மீளக்குடியேறுதல் அம்மக்களின் வாழ்வாதாரங்களின் மீள் கட்டமைப்பு மீள் நிர்மாணம் சரணடைந்தவர்கள் காணமல்போன இளைஞர் யுவதிகள் மற்றும் நீண்டகாலம் நீதிமன்றக் காவலில் சிறைகளிலுள்ளோர் விடுதலை மற்றும் புனர் வாழ்வு;
2. நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வு என்பன தொடர்பாகவே பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
இதன் பொருட்டு தமிழ் மக்களினதும் தமிழ் முஸ்லீம் மக்களின் அரசியல் கட்சிகளுடனும் பிரதிநிதிகளுடனும் பேச்சு வார்த்தை நடாத்தி அரசியல் தீர்வு ஒன்றுக்கான ஒன்றுபட்ட அடிப்படைத் கொள்கைத் திட்டமொன்று உருவாகவும் முயற்சிகள் எடுக்கப்பட்;டு வருவதையும் அறிவீர்கள்
இந்த முயற்சிகளுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினதும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினதும் அனுசரனை உண்டு என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இலங்கை அரசு இனப்பிரச்ப்னைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன் வைக்காமலும்அதற்கான திடசங்கற்பம் இல்லாமலும் இழுத்தடிப்பதை அறிவோம். இருப்பினும் சர்வதேசத்தில் எழுந்துள்ள தமிழ் மக்களுக்குச் சாதகமான சூழலும் புலம்பெயர்ந்திருக்கும் தமிழ் மக்களின் ஆதரவும் இன்னும் எம் மக்களுக்கு பெரும் பலமாக இருக்கின்றது. எம் மக்கள் இற்றை வரை செய்த தியாகங்களும் கொடுத்த விலைகளும் அளப்பரியனவாகும். இவை யாவும் அவம் போகாமல் எம் இனத்தின் விடிவுக்கும் விடுதலைக்கும் பயனுற வேண்டும் என்பதில் ஆழமான பற்றுடன் உபாயத்துடன் செயலாற்ற வேண்டியுள்ளோம்.
நாம் எடுத்து வரும் ஈடுபட்டு வரும் இந்த முயற்சிகளுக்கு எம் தமிழ் மக்கள் பூரணமான ஒன்றுபட்ட ஆதரவைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இவ் உள்ளுர் அதிகார சபைத் தேர்தலிலும் வழங்க வேண்டும் என தங்கள் பாதம் தொட்டு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
4.தரகு அரசியல் முகமும் தமிழர் பிரதிநிதிகள் புறக்கணிப்பும்
எம் தமிழ் மக்கள் சென்ற பொதுத் தேர்தலில் தெளிவான தீர்க்கமான ஒரு தீர்ப்பை வழங்கிய பொழுதிலும் அரசாங்கத்தின் இன்னொரு முகம் தரகர்களையும் அமைச்சர்களையும் தமிழ்ப் பிரதேசத்தில் உருவாக்கி தமிழ் மக்களிடையே நியமனம் செய்து அபிவிருத்தியென்ற போர்வையில் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அந்நியப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதையும் அறிவீர்கள்.
இந் நடைமுறை மூலம் எம் மக்களை பலவீனப்படுத்திபிளவுபடுத்தி அரசை ஆதரிக்கச் செய்து அரசு நினைக்கும் அரசியல் தீர்வை தமிழ் மக்களிடம் திணித்து விட்டு சர்வதேசத்தையும் திருப்திப்படுத்தலாம் என தரகு அரசியல் வியாபாரத்தில் ஈடுபடுவோர் செயல்படுவதையும் அறிவீர்கள். இத் தேர்தல் மூலம் இக் கால கட்டத்தில் ஜனநாயக வழியிலும் தமிழ் மக்களை தோற்கடித்து விடவும் தமிழ் மக்கள் ஜனாதிபதியினதும் அரசினதும் நடவடிக்கைககளையெல்லாம் ஏற்கிறார்கள் என்பதை உலகிற்குக் காட்டுவதற்கும் அரசு கங்கணங்கட்டி நிற்கிறது. இதனை எம்மக்கள் ஒரு பொழுதும் ஏற்கமாட்டார்கள்.
சர்வதேசத்தில் இந்த அரசுக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு. இனப் பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதாகக் காட்டிக் கொண்டே ஒரே இனம். ஒரே தேசம் எனும் பேரினவாத சித்தாந்த நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்துவதில் அரசு தீவிரமாயிருக்கிறது.
பொருளாதார ரீதியில் இந்த நாடு வீழ்ச்சி அடைந்து வருவதையும். உலக நாடுகளிடம் பட்ட கடனையே அடைக்க முடியாமலிருப்பதையும் உயர்ந்து வரும் விலைவாசிகளைக் கட்டுப்படுத்த முடியாமல்உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைத் தடுக்க முடியாமல் திண்டாடிவரும் அரசு இராணுவச் செலவினங்களுக்காக யுத்த காலத்தை விட மிக அதிகமாக மக்களின் வரிப்பணத்தை தேசிய வருமானத்தை ஒதுக்கி வருவது மட்டுமல்ல யுத்தம் மீண்டும் வந்துவிடுமென்று மக்களை ஏமாற்றியும் வருகிறது. உண்மையில் தமிழின அடக்குமுறை ஒடுக்குமுறை மட்டுமல்ல மொத்தமாக ஜனநாயக மனித உரிமைகள் மீறப்பட்டே வருகின்றன.
எம் மக்கள் கண்ணீரைத் துடைக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம; இராசதந்திரிகளிடம் புலம் பெயர்ந்த மக்களிடம் மனிதாபிமான உதவிகளுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைமைத்துவம் பேச்சு நடத்தியது. உதவி கோரியது. அவ்வாறு கிடைத்த மனிதாபிமான உதவிகளை மக்களுக்கு வழங்கும் போதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைப் புறக்கணிக்கவும் தரகு அரசியல் வாதிகளை முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதையம் அறிவீர்கள். மக்கள் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டவும் அதேவேளை இத்தகைய தரகு அரசியலை எம் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்கவும் வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கின்றோம்.
5.ஜனநாயக விழுமியங்களை பேணும் பொறுப்பு
1. இத் தேர்தலின் மூலம் நீண்டகாலம் நடைமுறையற்றிருந்த ஜனநாயக விழுமியங்களை மீளப்பேணவும் உள்ளுர் அரசியல் தலைமைத்துவத்தை அத்திபாரத்திலிருந்து கட்டியெழுப்பவும் உள்ளுர்அபிவிருத்தி நடவடிக்கைகளை உள்ளுர் அதிகாரசபை மூலம் முன்னெடுக்கவும் தேவையான அரசியல் ஜனநாயகஅதிகாரத்தையும் உரிமையையும் எம் மக்கள் பெற்றுக் கொள்ள முடியுமென அறுதியிட்டுக் கூறுகின்றோம்.
2.அடிமட்டத்திலுள்ள உள்ளுராட்சி அதிகாரசபைகள் கல்வி சுகாதாரம் தாய் சேய் நலம்பராமரிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அதிகாரங்களும் மூலவளங்களின் பயன்பாடு உள்ளிட்ட மேம்பாட்டுத்திட்டங்களின் மீது திட்டமிடல் அபிவிருத்தி செய்தல் வேலைவாய்ப்பு வழங்கல் என்பன மீது அதிகாரங்களும் நிதிமூலங்களும் ஒதுக்கீடுகளும் என்பன பற்றியும் எதிர்காலத்தில் சட்ட அதிகாரமுள்ள சபைகளாக உள்ளுர் அதிகார சபைகள் வலுவடையவும் முயற்சிகள் எடுக்கப்படும்.
3. மேலும் உள்ளுர் அதிகார சபைகளுக்கு கூடுதலான அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கு உதாரணமாக இங்கிலாந்தின் கவுன்ரி கவுன்சில் முறை உள்ளிட்ட ஏனைய தேசங்களில் உள்ளவாறு நாம் நடவடிக்கை எடுப்போம் என்பதையும் தெரிவுத்துக் கொள்கின்றோம்.
4. ஒவ்வொரு உள்ளுராட்சி மன்ற பிரதேசத்தினது தேவைகளையும் அபிவிருத்திப் பணிகளையும் இனங்கண்டு அவற்றை நிறைவேற்றும் வகையிலே ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றத்துக்கான நோக்கங்கள; இலக்குகள் என்பனவற்றை தனித்தனியாக வாக்காளப் பெருமக்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.அதற்குத் தேவையான பொருத்தமான நிபுணத்தவத்தையும் திரட்டி வழங்கவும் எண்ணங்கொண்டுள்ளோம். வேட்பாளர்களுக்கும் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கும் தலைமைத்துவம் மற்றும் உள்ளுர் அதிகார ஆட்சித் தத்துவம் மேம்பாடுகள் தொடர்பான கற்கை நெறிகள் வழிகாட்டல் வழிமுறைகள் மீதான பயிற்சிப் பாசறைகளும் தகுந்தோரால் வழங்கப்படவும் முயற்சி எடுக்கப்படும்.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு எம்மக்களின் தியாகங்களே இன்று சர்வதேசத்தில் குறிப்பாக இந்தியாவில் தமிழ் மக்களுக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டு வரும் இராஜதந்திர மாற்றங்களாகும். எம் தமிழ் மக்கள் ஒற்றமையுடன் இத்தேர்தலிலும் ஒன்றுபட்டு திடசங்கற்பத்தை வெளிப்படுத்துவதன் மூலம் இராஜதந்திரரீதியாகவும் எம் இனம் வெற்றி பெறமுடியும்
கடந்த 60ஆண்டுகளுக்கு மேலாக நாம் முன்னெடுத்து வரும் உரிமைக்குரலுக்கு வலுச் சேர்க்கவும் இந்த நாட்டிலேயே எமது உள்ளுராட்சி மன்றங்கள் மீண்டும் முதன்மை நிலையைப் பெற்றுக்கொள்ளவும் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் வழிவகுக்க வேண்டும்.
எனவே எதிர் வரும் 23ந் நாள் (23.07.2011) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுக்கு நேரே புள்ளடியிட்டும் அத்துடன் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு தங்கள் விருப்பு வாக்குகளை வழங்கியும் சகல உள்ளுராட்சி அதிகாரசபைகளிலும் எமது அணிகளை வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply