ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எதிர்ப்போர் அரசிலிருந்து வெளியேற வேண்டும் : வாசுதேவ நாணயக்கார
நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் அமுல்படுத்துவதை எதிர்ப்பவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டுவதை கடுமையாக எதிர்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லுறவுக்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கமே நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது எனவே அதன் பரிந்துரைகள் அமுல்படுத்த வேண்டியது கட்டாயமாகும். எவராவது தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் இதனை கண்காணிப்பதற்கோ வெளிநாட்டு அனுசரணை தேவையில்லை. உள்நாட்டு சட்டங்களுக்கமைய விசாரணைகள் நடத்தப்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சிறந்ததாகும். எனவே பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதை எதிர்க்கும் அரச தரப்பில் உள்ளோர் வெளியேற வேண்டும்.
தமிழர் எதிர்ப்பு
யுத்தம் முடிந்து இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அபிவிருத்திகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார். இவ்வாறானதோர் சூழ்நிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் கூட்டுப் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் அமைச்சர் சம்பிக்க தமிழ் மக்களுக்கு எதிரான கருத்தை வெளியிட்டுள்ளமை பாரதூரமானதாகும்.
இத்தகைய கருத்துக்கள் அரசாங்கத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும். எனவே அமைச்சர்கள் தமது நாட்டுப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அமெரிக்கா எதிர்ப்பு
அமைச்சர் விமல் வீரவன்சவின் அமெரிக்காவிற்கு எதிரான கருத்துக்களை வரவேற்கின்றேன். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான செயற்பாடு அது. ஆனால் பத்திரிகைகள் அமைச்சர் விமலின் கருத்தை கேலிக் கூத்தாக சித்தரிக்கின்றன. இதனை கடுமையாக கண்டிக்கின்றேன்.
எம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவிற்கு அமெரிக்கப் பொருட்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் எமது நாட்டுப் பொருட்கள் அதிகளவில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இது சாத்தியமானதாக இல்லை.
ஆனால் அமைச்சர் விமலின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கருத்தை பத்திரிகைகள் கேலிக் கூத்தாக சித்தரிப்பது பத்திரிகைகளின் ஏகாதிபத்திய வாத அடிமைத்தனத்தை சித்தரிப்பதாகவுள்ளதென்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply