இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ஆதரிக்க இந்தியா முடிவு!
இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சில திருத்தங்களுடன் ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக புதுடில்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்று தரும் நெருக்கடிகள், அமெரிக்காவே நேரடியாக ஆதரவு கோரி நிற்கும் சூழல், தீர்மானத்தின் நெகிழ்வுத்தன்மை கொண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
“இலங்கைக்கு எதிரான தீர்மான விஷயத்தில், இந்தியாவின் நிலை கண்டு கொதித்துப் போய், “எட்டுகோடி இந்தியத் தமிழர்கள் முக்கியமா…? இனப்படுகொலை செய்த இலங்கை அரசு முக்கியமா? போரை நடத்த துணைநின்ற பாவத்தை இந்திய அரசு எப்படி தீர்க்கப் போகிறது,” என்ற கேள்விகளை நாடாளுமன்றத்திலேயே தமிழர் கட்சிகள் முன்வைத்தன.
தா. பாண்டியன் போன்றவர்கள், இந்த முறை இந்தியா இலங்கைக்கு ஆதரவு காட்டினால், நான் ஒரு இந்தியன் என்ற குடியுரிமையையே மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும். நான் மட்டுமல்ல, இதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்துச் செல்லும் நிலைக்கு அனைத்துத் தமிழ் கட்சிகளும் தள்ளப்பட்டுவிடும் என பகிரங்கமாகக் கூறினார்கள்.
திமுக எம்பிக்களும் இதையே நாடாளுமன்றத்தில் எதிரொலித்தனர். ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிமுகவினரும் இந்த விஷயத்தில் உறுதியாக நின்று மத்திய அரசை எதிர்த்துக் குரல் எழுப்பினர்.
இனியும் இந்தப் பிரச்சினையில் தெளிவான நிலை எடுக்காது காலம் தாழ்த்தினால், அது தமிழ்நாட்டில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமரிடமும் காங்கிரஸ் தலைவர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசி விளக்கியுள்ளார்.
“இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அளித்த விளக்கம் சரியல்ல. அது தமிழ் இனத்துக்கே எதிரானதாகப் பார்க்கப்படுகிறது. இலங்கை நட்பு நாடு என்றால், தமிழ்நாடு பகையாளியா என்ற கேள்வியை கிருஷ்ணாவின் அறிக்கை எழுப்பிவிட்டது ” என சிதம்பரம் அழுத்தமாகக் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.
இது பிரதமர், சோனியா உள்ளிட்ட அனைவரையுமே சிந்திக்க வைத்துள்ளது. எனவே சில முக்கியமான அம்சங்களில் திருத்தங்கள் செய்து, தீர்மானத்துக்கு ஆதரவு தரலாம் என்பதே இப்போதைய நிலைப்பாடு” என அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இன்னொரு பக்கம், இந்தியாவிடமிருந்து கட்டமைப்பு, பொருளாதார உதவிகளைப் பெருமளவு பெற்று வரும் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் கைகோர்த்து செயல்படுவது டில்லியை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.
குறிப்பாக, நாச்சிக்குடா, கச்சதீவில் சீனாவை காலூன்ற வைக்கும் வகையில், சீன வீரர்கள் உதவியுடன் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அமைத்திருப்பது இந்தியாவுக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.
எனவே இலங்கையை கடுமையாக எச்சரிக்கும் விதமாக, ஐநாவில் தமிழருக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதிலும் சிதம்பரத்தின் பங்குதான் முக்கிய அங்கம் வகிக்கிறது. ராஜீய உறவுகளில் இலங்கை தொடர்ந்து இழைத்து வரும் துரோகம், இலங்கைக்கு ஆதரவளிப்பதால், தமிழகத்தில் எந்த அளவு காங்கிரஸ் அந்நியப்பட்டு நிற்கிறது என்ற உண்மை ஆகியவற்றை சிதம்பரம்தான் இந்த முறை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
இவரது கருத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், அந்தோனி ஆகியோர் ஒப்புக் கொண்டதைவிட, எப்போதும் இலங்கையின் நண்பனாகத் திகழும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புக் கொண்டதைத்தான் டில்லி வட்டாரங்களில் ஆச்சரியமாகப் பேசுகிறார்கள்.
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்க இந்திய மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தமிழகத்தின் தினமணி நாளேடு தெரிவித்துள்ளது.
இவ்விவகாரத்தில் தமிழகத்தில் எழுந்துள்ள கொதிநிலையைக் கவனத்தில் கொண்டு இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு விளக்கியதன் ஊடாகவே பிரேரணையை இந்தியா ஆதரிக்க முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய மத்திய அரசின் இந்த நிலைப்பாடு குறித்து அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பிலான பிரேரணைக்கு ஆதரவு வழங்குவது அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விடுகின்ற இக்கட்டான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர் பொல் நியூமன் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் பொல் நியூமன் ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவில் பங்கெடுத்திருக்கின்றார்.
இதுவரை இத்தகைய அழுத்தத்தை டெல்லி சந்தித்ததில்லை என தெரிவித்துள்ள பேராசிரியர் பொல் நியூமன் 2009ஆம் இத்தகைய அழுத்தம் டில்லியில் ஏற்பட்டிருந்தால் குறைந்தபட்சம் 40 ஆயிரம் உயிர்களையாவது காப்பாற்றியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானம் எதிர்வரும் 22 அல்லது 23ஆம் திகதி ஐநா மனித உரிமைச் சபையில் வாக்களிக் விடப்படுகிறது. ஏற்கனவே இந்தத் தீர்மானத்துக்கு 23 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்னும் ஒரு நாடு ஆதரவளித்தாலே போதும். எனவே இந்தியா ஆதரித்தாலும், இல்லாவிட்டாலும் தீர்மானம் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply