இலங்கையில் பெண்களையும் வெள்ளை வேனில் கடத்தும் அளவுக்கு நிலைமை மோசம் : ஐ.தே.க.

புத்தாண்டின் பின்னர் அரசாங்கம் நாட்டையும் பொது மக்களையும் சர்வதேசத்திடம் காட்டிக் கொடுத்துவிடும். அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியிலான தோல்விகளினால் அரசாங்கம் பெண்களையும் வெள்ளை வேனில் கடத்தும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போதல் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றுக்கு பெயர்போன நாடாக இலங்கை மாறிவிட்டது. ஜெனீவா தீர்மானங்கள் நாட்டிற்கு பாரிய சவாலாக அமைகையில், அரசாங்கம் அத்தீர்மானங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் உள்நாட்டில் மக்களின் வாழும் உரிமை, சுதந்திரம் என்பவற்றை அடியோடு பறித்துவிட்டுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஐ.தே.க.வின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக மேலும் கூறுகையில்,

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாகிவிட்டன. தற்போதைய அரசாங்கத்திற்கு ஏழு வருடமாகின்றது. ஆனால் நாடு இன்னும் அதே நிலையிலிருந்து பின்னோக்கிச் செல்கின்றதே தவிர, முன்னேற்றங்கள் எதுவும் இதுவரையில் இல்லை. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பொதுமக்கள் எதிர்பார்த்த நிவாரணங்கள் கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது. பொதுமக்களின் நிலை கவலைக்கிடமாகியுள்ளது. தூர நோக்கு சிந்தனையற்ற நிர்வாக சீர்கேடுகளும் ஊழல் மோசடிகளும் நிறைந்த தற்போதைய அரசாங்கத்தின் இயலாமையினால் நாடு படு பாதாளத்தில் விழுந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து வரிகள் அதிகரிப்பு மற்றும் நிவாரணங்களுக்கான வெட்டுகள் என்பவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதனால் பெரும்பாலும் புத்தாண்டிற்குப் பின்னர் நாட்டை சர்வதேசத்திற்கு காட்டிக் கொடுக்கும் நிலையே உருவாகும்.

எவ்வாறாயினும் அரசின் வாயிலிருந்து உண்மையை வரவழைப்பது என்பது கருங்கல்லில் நார் உரிப்பது போன்றதாகும். ஜெனீவா தீர்மானங்களினால் நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளதுடன் சர்வதேச ரீதியில் பின்னடைவுகளையும் அபகீர்த்தியையுமே அடைந்துள்ளது.

இவ்வாறான சூழல் நாட்டிற்கு எதிராக காணப்படுகையில் தனது வெள்ளை வேன் கடத்தல் மற்றும் காணாமல் போதல் போன்றவற்றை அரசு பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றது. இதனால் நாடு மேலும் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பையும் பொதுமக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் தற்போதைய அரசோ அனைத்திலும் கை கழுவிவிட்டுள்ளது எனக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply