சட்டவிரோதமாக தங்கியிருந்த குணரட்ணம் ஆஸிக்கு நாடுகடத்தல்
காணாமல் போனதாகக் கூறப்பட்ட அவுஸ்தி ரேலியப் பிரஜையான பிரேம்குமார் குணரட் ணம் இலங்கையில் தங்கியிருப்பது குடிவரவு குடியகல்வுச் சட்டத்துக்கு முரணானது என்பதால் அவரை நாடு கடத்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பிரேம்குமார் குணரட்னம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப் பட்டதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கடந்த சில தினங்களாக இந்த இரண்டு நபர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்ததுடன், பல்வேறு அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். இவர்கள் அனைவரும் இணைந்து கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
குணரட்ணம் மீள வந்திருப்பதுடன், இவர் இலங்கையில் தங்கியிருப்பதானது நாட்டின் குடிவரவு குடியகல்வுச் சட்டத்துக்கு முரணானது என்பதால் அவரை நாடு கடத்தியுள்ளோம். காணாமல் போனதாகக் கூறப்படும் ஆட்டிகல என்பவரும் மீள வந்துள்ளார்.
பின்வரும் விடயங்கள் குறித்து இராஜதந்திர சமூகத்தைத் தெளிவுபடுத்த அமைச்சு விரும்புகிறது.
பிரேம்குமார் குணரட்ணம் மூன்று தடவைகள் தனது பெயரை மாற்றியுள்ளார். முதலாவது பெயர் வன்னிநாயக்க முதியன்சலாகே டஸ்கன் என அவருடைய விவாகச் சான்றிதழில் காணப்படுகிறது.
இவர் நாட்டுக்குள் வருவதற்குப் பயன்படுத்தியிருக்கும் கடவுச்சீட்டில் ரத்நாயக்க புதியன்சலாகே தயால எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் 4ஆம் திகதி இவர் இலங்கைக்குள் வருவதற்கு பயன்படுத்தி அவுஸ்ரேலிய கடவுச்சீட்டில் நொயல் முதலிகே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மாறுபட்ட தகவல்களை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகத்துக்கும் இவர் முன்னர் வழங்கியுள்ளார் என்பது விசாரணைகள் நடத்தியபோது தெரியவந்தது.
கடத்தல் சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களை வைத்துப் பார்க்கும்போது சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது. குணரட்ணம் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஏப்ரல் 7ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றுள்ளது. எனினும் பிற்பகல் 4.10 மணிக்கே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 மணித்தியாலங்களின் பின்னரே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திமுத்துவின் கடத்தல் சம்பவம் குறித்துப் பார்க்கும்போது ஏப்ரல் 6ஆம் திகதி பிற்பகல் 8 மணிக்கு அவர் கடத்தப்பட்டுள்ளார். மறுநாள் பிற்பகல் 3.35 மணிக்கே இவருடைய கடத்தல் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் முழுமையான இடைவெளி காணப்படுகிறது. உண்மையான கடத்தல் சம்பவமாயின் பாரிய இடைவெளியின் பின்னரா பொலிஸில் முறைப்பாடு செய்யப்படும் என்பது சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது.
அரசியல் நோக்கத்துக்காக ஒரு குழுவொன்றினால் செய்யப்பட்ட விடயம் என்பது சாட்சியங்களுடன் தெளிவாகியுள்ளது. ஏனெனில், அரைகுறையாகக் கட்டிமுடிக்கப்பட்ட மேல்வீடொன்றில் அறையிலிருந்தே இவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இது சாட்சியங்களுடன் நன்கு தெளிவாகியுள்ளது.
குணரட்ணத்தின் மனைவி இவரின் கடத்தல் தொடர்பில் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளார்.
பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் 2006 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி முதல் அவருடன் வசிக்கவில்லையென்றும், அவர் எங்கு உள்ளார் என்பது பற்றித் தனக்குத் தெரியாதென்றும் கூறியுள்ளார்.
குணரட்ணம் கடந்த 5 மாதங்களாக இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. அவருடைய விசாவும் 5 மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்துள்ளது.
குணரட்ணம் மற்றும் ஆட்டிகல ஆகியோர் காணாமல்போன சம்பவங்கள் தொடர்பில் முரண்பாடான தகவல்கள் உள்ளன என்பது சாட்சியங்களுடன் தெளிவாகியுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply