சுஷ்மா சுவராஜ் அப்பட்டமான பொய் சொல்கிறார் – சீமான் பதிலடி
இலங்கை தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை என்பது அப்பட்டமான பொய். இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எவ்வளவு பெரிய பொய்யை கூச்சமின்றிப் பேசுகிறார்?, என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடந்த தாமரை சங்கமம் மாநாட்டில் கலந்துகொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ், இலங்கைத் தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை என்று பேசியுள்ளார். இக்கருத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழர்களின் நிலை அங்கு எப்படியிருக்கிறது, எந்த அளவிற்கு அங்கு இராணுவத்தின் அடக்குமுறை இன்றும் தொடர்கிறது, தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களர்களுக்கு அளிக்கப்பட்டு, தமிழர் பகுதிகள் சிங்கள குடியிருப்புகளாக மாற்றப்படுகின்றனவே, இராணுவ ஆக்கிரமிப்பினால் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனரே என்று தமிழர்கள் கூறியதையெல்லாம் தமிழ்நாட்டில் நடக்கும் தங்கள் மாநாட்டில் பேசாத சுஷ்மா சுவராஜ், அவர்களின் அரசியல் விருப்பம் தனித் தமிழ் ஈழம் அல்ல என்று பதிவு செய்ய முற்படுவது ஏன்?
தமிழர் பகுதிகளில் ஒரிரு நாட்கள் மட்டும் பயணம் செய்து ஒரிரு மணி நேரங்கள் மட்டும் சில தமிழர்களிடம் பேசிவிட்டு, அவர்கள் விரும்புவது தனித் தமிழ் ஈழம் அல்ல என்று சுஷ்மா பேசிகிறார் என்றால், அவர் தமிழர்களின் விருப்பத்தை விட,தமிழ் ஈழம் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டையும், இலங்கை ஜனாதிபதியின் விருப்பத்தையும்தான் பேசியுள்ளார்.
தங்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலை இயக்கத்தை அழித்தொழிக்க, பாதுகாப்பு வளையத்தில் தஞ்சமடைந்திருந்த தங்கள் மீது தடை செய்யப்பட்ட ஆயுதங்களான கொத்துக் குண்டுகள், வெப்பக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், இரசாயனக் குண்டுகள் ஆகியவற்றை போட்டு கொத்துக்கொத்தாக தங்கள் சொந்தங்களை ஈவிரக்கமின்றி அழித்த இலங்கை அரசுடன் இணைந்து வாழ ஈழத் தமிழர்கள் விரும்புகிறார்களா?
இரண்டரையாண்டுக் காலப் போரில் தங்கள் சொந்தங்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேரை திட்டமிட்டு இனப் படுகொலை செய்து, தங்கள் சகோதரிகள் ஒரு இலட்சம் பேரை விதவையாக்கி,வாழ வழியற்ற நிலையை ஏற்படுத்திய இனவெறி இலங்கை அரசுடன் இணைந்து வாழ ஈழத் தமிழர்கள் விரும்புகிறார்களா?
அரை நூற்றாண்டுக் காலமாக இராணுவத்தை பயன்படுத்தி தங்கள் மீது அரச பயங்கரவாதத்தைத் கட்டவிழ்த்துவிட்ட அரசுடன் இணைந்து வாழ்வதே தங்களுக்குப் பாதுகாப்பு என்று சுஷ்மாவிடம் எங்களது தமிழ்ச் சொந்தங்கள் கூறினரா?
எவ்வளவு பெரிய பொய்யை கூச்சமின்றிப் பேசுகிறார் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்!
இலங்கைத் தமிழர்களின் விருப்பம் தனித் தமிழ் ஈழமல்ல என்று கூறும் சுஷ்மா சுவராஜூம், அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சியும் இலங்கைத் தமிழர்களின் முடிவை அறிய அங்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்பத் தயாரா என்று நாங்கள் கேட்கிறோம்.
இன்று, நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே உலக நாடுகளுக்கும், ஐ.நா.விற்கும் தமிழினம் விடுக்கும் கோரிக்கை இதுவே. அதே கோரிக்கையை நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி முன் வைக்குமா? என்று கேட்கிறோம்.
அப்படிச் செய்தால் அது அறிவு நாணயமுடைய செயலாக இருக்கும். ஒரிரு மணி நேரங்கள் மட்டும் அங்குள்ள தமிழர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்து அவர்கள் தமிழீழ தனி நாட்டை ஏற்கவில்லை என்று கூறுவது இந்திய, இலங்கை அரசுகளின் இரகசியத் திட்டத்தையே பிரதிபலிக்கிறதே தவிர, உண்மையை அல்ல.
இந்தியாவின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மார்க்சிஸ்ட் கட்சிகள் மட்டும் இலங்கை அரசை தூக்கி பிடித்துக்கொண்டு, தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை கொச்சைபடுத்தி வருகின்றன. இது கண்டனத்திற்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply