27 வருடங்களின் பின்னர் 3000 கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல்

இராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் குழு, அமெரிக்காவிடமிருந்து, வெளிநாட்டு இராணுவ விற்பனை திட்டம் மூலம், எம்777 பி.ஏ., பீரங்கிகளை இராணுவத்துக்கு வாங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

எம்777 ரக பீரங்கிகள் 4218 கி.கிராம் எடை உள்ளது. இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 5 சுற்றுக்கள் வரை சுட முடியும். இந்த துப்பாக்கிகள் மூலம் 30 கி.மீ தூரம் வரை சுடலாம்.

இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள் தொடர்பாக இராணுவ தளபதி விகே சிங் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து ஆயுத கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள 155 எம் எம் 39-காலிபர் பீரங்கிகள் எளிதாக மிகவும் உயரமான மலை பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும். இதன் படி இந்த வகை பீரங்கிகள் வட கிழக்கு இந்தியா மற்றும் சீனா எல்லையில் உள்ள லடாக் பகுதியிலும் பயன்படுத்தப்படும்.

இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை கொண்டு செல்ல வசதியாக வட கிழக்கு பகுதிகளில் சாலை வசதி மற்றும் ரயில் பாதை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியது.

எம்777 ரக பீரங்கிகள் தற்போது அமெரிக்க இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 27 வருடங்களுக்கு பின்னர் சுமார் 3000 கோடி ரூபாய் அளவுக்கு இராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போபர்ஸ் விவகாரத்திற்குப் பின்னர், கடந்த 27 வருடங்களில் பீரங்கிகள் வாங்குவது இது முதல் முறை என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply